Published : 11 Oct 2020 04:06 PM
Last Updated : 11 Oct 2020 04:06 PM
புதுச்சேரியில் இன்று புதிதாக 320 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக் 11)கூறும்போது, ‘‘புதுச்சேரியில் 4,352 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 253, காரைக்காலில் 39, ஏனாமில் 6, மாஹேவில் 22 என மொத்தம் 320 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.78 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 31 ஆயிரத்து 549 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,364 பேர், காரைக்காலில் 424 பேர், ஏனாமில் 48 பேர், மாஹேவில் 197 பேர் என 3,033 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுபோல் புதுச்சேரியில் 1,408 பேர், காரைக்காலில் 101 பேர், ஏனாமில் 68 பேர், மாஹேவில் 85 பேர் என 1,662 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைச் சேர்த்து மொத்தம் 4,695 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று புதுச்சேரியில் 234 பேர், காரைக்காலில் 73 பேர், ஏனாமில் 14 பேர், மாஹேவில் 15 பேர் என 336 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 291 (83.33 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 858 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 583 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். உள்ளூர் மக்கள் 70 சதவீதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர். ஆனால், சுற்றுலாப் பயணிகள் 90 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை. இன்று நான் சீகல்ஸ் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் சென்று பார்த்தபோது 100 பேரில் 2 பேர்தான் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரம் சற்று மேம்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருப்பதால் முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இதனைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT