Published : 11 Oct 2020 02:07 PM
Last Updated : 11 Oct 2020 02:07 PM
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக மூத்த தலைவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவை அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குத் தேவையான என்னென்ன செய்வோம் என்பதை வாக்குறுதியாக அளித்து தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள். இதில் ஆட்சிக்கு வர முடியாத சிறிய கட்சிகளும், கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள்.
சில நேரம் கட்சிகள் இணைந்து குறைந்தபட்ச பொதுத்திட்டம் என்கிற பெயரில் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிடும். தேர்தல் அறிக்கை பல நேரம் கட்சிகள் வெல்லக் காரணமாக அமைந்துள்ளது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச மடிக்கணினி, மதுக்கடைகள் படிப்படியாகக் குறைப்பு, போலீஸார் 20 ஆண்டுகள் பணி செய்தாலே காவல்துறை எஸ்.ஐ.க்கள் பதவி உயர்வு போன்ற அறிவிப்புகள் ஆட்சியில் வாக்குகளைத் தீர்மானித்தன.
இதனால் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆட்சிக்கு வரத்துடிக்கும் கட்சிக்கும், ஆட்சியில் தொடரத் துடிக்கும் கட்சிக்கும் பெரிய போட்டி இருக்கும். அக்கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மிகவும் கவனம் செலுத்தும். அந்த வகையில் திமுக முந்திக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளது. கடந்த முறை தேர்தல் அறிக்கையில் திமுக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.
திமுகவில் இல்லாத பல்துறை வல்லுநர்களை இணைத்துக்கொண்டு அவர்கள் கருத்துகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த முறைபோலவே நிபுணர்கள், ஆர்வலர்கள் இணைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு குறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“ நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:
1. டி.ஆர். பாலு, (பொருளாளர்), 2. சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர்), 3. ஆ.ராசா (துணைப் பொதுச்செயலாளர்), 4. அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் பொதுச்செயலாளர்), 5. கனிமொழி, எம்.பி.,(தி.மு.க. மக்களவைக் குழு துணைத் தலைவர்), 6. திருச்சி சிவா, எம்.பி. (கொள்கைப் பரப்புச் செயலாளர்), 7. டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. (செய்தித் தொடர்புச் செயலாளர்), 8.பேராசிரியர் அ.ராமசாமி”.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT