Published : 11 Oct 2020 10:51 AM
Last Updated : 11 Oct 2020 10:51 AM
ராமேசுவரம்தனுஷ்கோடியில் வேகமாக நடைபெறும் கலங்கரை விளக்கம் கட்டும் பணி.
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி யில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை மூலம் கலங்கரை விளக்கம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் பழவேற்காடு, சென்னை மெரினா, மாமல்லபுரம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கள்ளிமேடு, கோடியக்கரை, அம்மாபட்டினம், பாசிப் பட்டினம், பாம்பன், ராமேசுவரம், கீழக்கரை, பாண்டியன்தீவு (தூத் துக்குடி மாவட்டம்) மணப்பாடு, கன்னியாகுமரி, முட்டம் ஆகிய இடங்களில் கலங்கரை விளக்கங்கள் உள்ளன.
இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்கரைப் பகுதிகளைக் கண்காணிப்பதற்காக ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் கலங் கரை விளக்கம் கட்டுவதற்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் பிப்.18-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரூ.7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி வசதிகளுடன் கலங்கரை விளக்கம் அமைய உள்ளது. இங்கிருந்து ராமேசுவரம், தனுஷ்கோடியின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வசதி செய்யப்படும். குழந்தைகளுக்கான பூங்காவும் அமைக்கப்படுகிறது.
கலங்கரை விளக்கப் பணி ஆறு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். கடல் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க அதிக உறுதி கொண்ட கம்பிகளும், ரசாயனக் கலவைகளும் பயன்படுத்தப்படுகிறது.
கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில் அமைக்கப்படும் மின்விளக்கின் வெளிச்சம் 18 நாட்டிகல்(மைல்) தூரம் அதாவது தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை ஒளிவீசும். சூரியசக்தியில் இயங்க உள்ள இந்த கலங்கரை விளக்கத்தில் ரேடார் பொருத்தப்பட்டு மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடலில் செல்லும் கப்பல்கள், மீன்பிடிப் படகுகள் கண்காணிக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT