Published : 11 Oct 2020 08:20 AM
Last Updated : 11 Oct 2020 08:20 AM
வடமாநிலங்களில் இருந்து இதுவரை போதிய ஆர்டர்கள் வராததால் சிவகாசியில் சுமார் ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் உள்ளன.
சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக பட்டாசுத் தொழில் முடங்கி உள்ளது. 2 மாத கால விடுமுறைக்குப் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசு ஆலைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் 50 சதவீத தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசுதயாரிப்பை ஈடுசெய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:
கணிக்க முடியவில்லை
வட மாநிலங்களில் இருந்து இந்த ஆண்டு போதிய ஆர்டர்கள் வரவில்லை. விநாயகர் சதுர்த்தி, தசரா விழாக்களுக்கு பட்டாசு விற்பனை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. தீபாவளி பண்டிகை மட்டுமே ஒரே ஆதாரம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்பனை எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை.
விற்பனையாளர்களும் இருப்பு உள்ள பட்டாசை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். வட மாநிலங்களில் இருந்து இதுவரை போதிய ஆர்டர்கள் வரவில்லை. இதனால் இந்த ஆண்டு சிவகாசி பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT