சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும்; தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டி: பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் சூளுரை நாள் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தியாகிகளின் உருவப் படங்களுக்கு பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார். மல்லை சத்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். படம்: ம.பிரபு
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் சூளுரை நாள் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தியாகிகளின் உருவப் படங்களுக்கு பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார். மல்லை சத்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும், மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவு வீரவணக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு மாநிலங்களின் பன்முக கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. மத்திய தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் செம்மொழியான தமிழை புறக்கணித்ததற்கு, எதிர்ப்பு எழுந்தவுடன் மீண்டும் தமிழை சேர்த்துள்ளது. அதேபோல் உள்ளாட்சி நிர்வாகத்தை கைப்பற்றி, மாநில அரசே டெண்டர் விடும் நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிமுக வரும் சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடையும்.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்தோடு இருக்கின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் வகையில் பணியாற்ற உள்ளோம். ஒன்றுபட்ட சிந்தனையோடு அதிமுக அரசை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்வோம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும்.

கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவரை அவமதித்தவர்கள் மீது வழக்கு தொடுத்து, கட்சிகளில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in