Published : 10 Oct 2020 08:02 PM
Last Updated : 10 Oct 2020 08:02 PM

இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுக்கு மட்டுமே கூட்டணியில் இடம்: கே.பி.முனுசாமி திட்டவட்டம்

சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுக்கு மட்டும் அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்கும். ஏற்காத கட்சிகளுக்கு இடம் இல்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை கிளம்பி கடந்த 15 நாட்களாக விவாதிக்கப்பட்டு இறுதியில் இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர் என ஒருமித்த கருத்துடன் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபகாலமாக பாஜக தலைவர்கள் பலர், அதிமுக கூட்டணியில் தொடருகிறோமா இல்லையா என்பது குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும்தான் அதிமுக கூட்டணியில் இருந்தது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் கூற முடியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். திமுகவுடன் கூட கூட்டணி அமையலாம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நாளில் பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது எனத் தெரிவித்தார். ஆனால், சில நாட்களாக பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்துப் பேசும்போது ஒருமித்த கருத்துடன் பேசாமல் பல்வேறு கருத்துகளைப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தலைவர் நேற்று முதல்வர் பழனிசாமியைச் சந்திப்பதற்கு முன் காலையில் அளித்த பேட்டியில், 'அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா?’ என்று கேள்விக்குப் பதிலளிக்கும்போது, 'தேர்தல் நேரத்தில்தான் முடிவுசெய்ய முடியும்' என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், 'அடுத்து அமையும் ஆட்சி என்டிஏ தலைமையில்தான் அமையும்' என்று தெரிவித்தார். அன்று மாலையில் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்தபின் அளித்த பேட்டியில், 'அதிமுகவின் முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்தேன்' என்று முருகன் பேட்டி அளித்தார்.

அப்போது ஒரு செய்தியாளர், 'இபிஎஸ் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரா? அதிமுக கூட்டணிக் கட்சியின் முதல்வர் வேட்பாளரா?' என்று கேட்டபோது, 'நான்தான் தெளிவாகச் சொன்னேனே' எனக் கூறிவிட்டு விருட்டென்று திரும்பிச் சென்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் என்டிஏ தலைமையிலான அணி என பாஜக தரப்பில் சொல்லப்பட, அது விவாதப் பொருளாகி இறுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி என்று அறிவித்தார்கள். இந்நிலையில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் என பாஜக தலைவர் சொல்ல மறுத்துச் சென்ற நிலையில் கே.பி.முனுசாமி இன்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்த கே.பி.முனுசாமியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “அதிமுக கூட்டணியில் இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர். ஒரு குறிப்பிட்ட கட்சியை நாங்கள் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. அது தேசியக் கட்சியாக இருந்தாலும், மாநிலக் கட்சியாக இருந்தாலும் எங்களுடைய கூட்டணிக்கு வரும்போது எங்கள் தலைமையில் நாங்கள் அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்பவர்கள்தான் எங்களோடு கூட்டணியில் இருக்க முடியும். ஏற்றுக்கொள்ளாதவர்கள் எங்களோடு கூட்டணியில் இருக்க முடியாது” என்று பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x