Published : 10 Oct 2020 06:39 PM
Last Updated : 10 Oct 2020 06:39 PM
காரைக்காலில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத் திறப்பு விழா அழைப்பிதழில் எதிர்க்கட்சி என்பதால் தனது பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் தெற்கு தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று (அக். 10) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் புதுச்சேரி முதல்வர் பெயரைத் தவிர அமைச்சர்கள், தொகுதி சட்டப்பேரவை உள்ளிட்ட காரைக்கால் மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெயர்கள் அச்சிடப்படாமல் அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டது.
இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, மத்திய அரசு விழா என்பதால் அதனடிப்படையில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். எனினும் விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், திடீரென இன்று விழாவுக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் பட்டியலில் அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற வகையில் இதிலும் கூட என் பெயர் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்தும் தெளிவான விளக்கம் தரப்படவில்லை.
நீதிமன்றக் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுத்து, பணிகளைப் பார்வையிட்டு பல நிலைகளில் பங்காற்றியிருந்தும் கூட, எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் என்பதாலேயே எனது பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அசனா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT