Published : 10 Oct 2020 05:41 PM
Last Updated : 10 Oct 2020 05:41 PM

இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கயத்தாறைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுக்கு கேரள எம்எல்ஏ ஆறுதல்

கேரளா மண்சரிவில் சிக்கி உயரிழந்த கயத்தாறு பாரதி நகரைச்சேர்ந்தவர்களின் உறவினர்களை தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவில்பட்டி 

இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்களின் உறவினர்களை கேரளாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஆக.6-ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. இதில் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் நேற்று மதியம் கயத்தாறு பாரதி நகர் வந்தார். உயிரிழந்த குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில், தந்தை சண்முகையா உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள 14 பேரை இழந்த விஜய்(21) என்ற இளைஞர் அரசு வேலை கேட்டு கோரிக்கை மனு வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, ஆக.6-ம் தேதி கேரள மாநிலம் இடுக்கியில் நடந்த மண் சரிவில் சிக்கி சுமார் 70 பேர் உயிரிழந்தனர். இதில் கயத்தாறு பாரதி நகரைச்சேர்ந்தவர்கள் 38 பேர். இதில் உயிரிழந்த முருகன் என்பவரின் 2 குழந்தைகள் இங்கே உள்ளனர். உற்றாரையும் உறவினர்களையும் இழந்து தவிக்கும் கயத்தாறு பாரதி நகரைச்சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்தேன்.

கேரளா மாநில முதல்வர் பினராய் விஜயன், இறந்த குடும்பங்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் படிப்பு மற்றும் பிற செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.

இந்தத் தகவலும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். எனது தந்தை திருநெல்வேலியில் உள்ளார். அவரைப் பார்க்க வந்தபோது, இங்குள்ளவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்தேன்.

உயிரிழந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய கேரளாவில் உரிய நடவடிக்கைகள் முடிவடைந்தது. இதில் சிலரின் பேர் பெயர்பெட்ட்விடுபட்டது. இதனால் ஒருவர் கூட விட்டுப்போகக் கூடாது என மீண்டும் அதன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் 8 பேருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டது.

ஆனால், முழுமையாக அனைவருக்கும் ஒரே சமயத்தில் சலுகைகள் வழங்குவது நல்லது என்ற அடிப்படையில் மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான இடமும் அளந்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் காலதாமதம் ஏற்படாது, என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x