Published : 10 Oct 2020 05:55 PM
Last Updated : 10 Oct 2020 05:55 PM
இந்திய அஞ்சல் துறை சார்பில் வரும் 15-ம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அஞ்சல் துறையின் குறிக்கோளை மக்களிடையே உணர்த்தி, அதன் பலதரப்பட்ட சேவைகளையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதே தேசிய அஞ்சல் வார விழாவின் நோக்கமாகும்.
அஞ்சல் வார விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் அஞ்சலகங்கள் மக்களுக்கு வழங்கிவரும் சேவைகள் குறித்து கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:
''கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை ஆகிய தலைமை அஞ்சலகங்கள், 78 துணை அஞ்சலகங்கள் 187 கிளை அஞ்சலகங்கள் என அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
அக்டோபர் 9 உலக அஞ்சல் தினமாகவும், அக்டோபர் 10 உலக வங்கி தினமாகவும், அக்டோபர் 12-ம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் தினமாகவும், அக்டோபர் 13 தபால் தலை சேகரிப்பு தினமாகவும், அக்டோபர் 14 வணிக வளர்ச்சி தினமாகவும், அக்டோபர் 15-ம் தேதி கடித தினமாகவும் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் சிறு சேமிப்புக் கணக்கு தொடங்க சிறப்பு கவுன்ட்டர்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர சிறப்பு கவுன்ட்டர்கள் மற்றும் ஆதார் சிறப்பு கவுன்ட்டர்கள், ஆயுள் காப்பீட்டு முதிர்வுத் தொகையை வழங்குதல், தபால்தலைக் கண்காட்சி, வாடிக்கையாளர் சந்திப்பு, வாடிக்கையாளரின் குறைகளைக் கேட்டறிதல் போன்ற பல்வேறு விசேஷ நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
மக்கள் சேவைக்கு என்றும் ஓய்வில்லை என்பதற்கு ஏற்ப இந்தக் கரோனா களத்திலும், அஞ்சலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கரோனா யுத்தத்தின் துணிச்சல்மிக்க போர்வீரனாகத் திகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்துப் பொருட்கள், கையுறைகள், முகக் கவசங்கள், உயிர் காக்கும் உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் போன்ற பல அத்தியாவசியப் பொருட்கள், கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. மின்னணு மணி ஆர்டர்கள் மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. 7,890 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை அஞ்சல்காரர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் அஞ்சல் துறையின் வீடு தேடி வரும் வங்கிச் சேவையான இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் 16,344 பயனாளிகளுக்கு 4 கோடியே 21 லட்சம் ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தங்க பத்திரம், 12 கோடியே 71 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அஞ்சலக ஆதார் சேவை மையங்கள் மூலம் 141 புதிய ஆதார் பதிவுகளும் 2,316 திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 43 அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாகர்கோவில் தலைமைத் தபால் நிலையத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மூலம் கடந்த மாதத்தில் 537 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட அஞ்சல் துறையின் பல்வேறு விதமான சேவைகளைப் பொதுமக்கள் பெற்று, பயனடைய வேண்டும்''.
இவ்வாறு கணேஷ்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT