Last Updated : 10 Oct, 2020 05:19 PM

 

Published : 10 Oct 2020 05:19 PM
Last Updated : 10 Oct 2020 05:19 PM

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.

இதில் தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி கலந்து கொண்டு பணிகளை ஆய்வு செய்கிறார். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்த முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கரோனா தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

மேலும், அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கியும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்த மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி வருவதாக இருந்தது. ஆனால், பிரதமருடனான காணொலி காட்சி ஆய்வு கூட்டம் காரணமாக தமிழக முதல்வரின் தூத்துக்குடி வருகை அப்போது ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் வரும் 13-ம் தேதி தூத்துக்குடி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதல்வர், தனியார் தங்கும் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அதிநவீன கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பகல் 12 மணியளவில் முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்துக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் அரங்கு, திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள், புகைப்பட கண்காட்சி அரங்கு அமைக்கப்படவுள்ள இடம் உள்ளிட்ட பகுதிளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியதாவது:

தமிழகத்தின் அடுத்த முதல்வராக, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முறைப்படி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி வரும் 13-ம் தேதி தூத்துக்குடி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மட்டும் ஆய்வு செய்யாமல், மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்கிறார். மேலும், முடிவுற்ற பல பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்வர் பேசுகிறார். சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகளைத் தொடங்கியும், திறந்தும் வைக்கிறார்.

மக்கள் கனவாக நினைத்த பல திட்டங்களை அன்றைய தினம் முதல்வர் அறிவிக்கவுள்ளார். தமிழக முதல்வரின் தூத்துக்குடி வருகை, வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.23 கோடி மதிப்பில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.17 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன வசதியை தமிழக முதல்வர் நேரடியாக திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் தென்மாவட்ட மக்கள் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சைக்கு சென்னைக்கு செல்ல வேண்டியது இல்லை" என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக ஆலோசனை:

தொடர்ந்து தூத்துக்குடிக்கு வரும் தமிழக முதல்வர் கே.பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று மாலை கட்சி அலுவலத்தில் வைத்து நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஒருவர் போனால் 100 பேர் வருவர்:

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார். இது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும்.

அதிமுகவில் இருந்து ஒருவர் போனால், நூறுபேர் அதிமுகவுக்கு வருவார்கள். திமுகவில் இணைந்துள்ள விளாத்திகுளத்தை சேர்ந்த நபர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. தற்போது அதிமுகவில் தான் அதிகமானோர் இணைந்து வருகின்றனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x