Published : 10 Oct 2020 04:58 PM
Last Updated : 10 Oct 2020 04:58 PM
தீபாவளி பண்டிகை வர்த்தகத்திற்க்காக 4 மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் சாலை மற்றும் பாதாள சாக்கடைப் பணிகள் வரும் 15-ம் தேதி முதல் 1 மாதத்திற்கு நிறுத்தப்படுகிறது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புதுப்பொலிவு பெறுகிறது.
பேவர் பிளாக் சாலைகள், பாதாளசாக்கடை அமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டாக நடக்கிறது. கரோனா ஊரடங்கால் இடையில் 5 மாதம் பணிகள் நடக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக மீண்டும் பணிகள் தொடங்கி நடக்கிறது.
மாசி வீதிகள், விளக்குதூன், வெண்கலக்கடை தெரு உள்ளிட்ட மீனாட்சிம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில்தான் மதுரையின் ஒட்டுமொத்த வர்த்தகமும் நடக்கிறது. நகைக்கடைகள், ஜவுளிநிறுவனங்கள், ஹார்டுவேர் கடைகள், வீட்டு உபயோர நிறுவனக் கடைகள், எலக்ட்ரிக் கடைகள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் ஷாப்பிங் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களும், கடைகளும் இப்பகுதியில் செயல்படுகின்றன.
அதனால், மதுரைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் மக்களும் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள இந்த வீதிகளில்தான் தினமும் ஷாப்பிங் செல்வார்கள். ஆண்டு முழுவதுமே திருவிழா போல் இந்த சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த வீதிகளில் நடக்கவே முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். கரோனா ஊரடங்கதால் இந்த வீதிகளில் கடைகள் மூடப்பட்டதால் மதுரையின் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
தற்போது சரஸ்வதி பூஜை, நவராத்திரி பண்டிகை, அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஜவுளிக்கடைகளில் வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளன.
அதனால், மாலை, காலை நேரங்களில் மாசிவீதிகள் மட்டுமில்லாது கோயிலைச் சுற்றியுள்ள மற்ற சாலைகளிலும் வழக்கத்திற்கு மாறாக வாகனப்போக்குவரத்தும், மக்கள் வருகையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால், மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டிப்பணிகள் தொடங்கி நடப்பதால் பாதாள சாக்கடைக்காகவும், சாலையை அகலப்படுத்தி பேவர் பிளாக் சாலை அமைக்கவும் பணிகள் நடக்கின்றன.
இந்தப் பணிகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மந்தமாக நடப்பதால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் பொருட்களை வாங்க வரும் மக்களும், நடந்து வரும் மக்களும் இந்த சாலைகளை கடந்து செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.
மழைக்காலத்தில் தண்ணீர் தெப்பம்போல் தேங்கி சாலை எது பள்ளம் எது எனத் தெரியாமல் மக்கள் வாகனங்களுடன் கீழே விழுந்து செல்கின்றனர்.
மழையில்லாவிட்டால் தோடிண்போடப்பட்ட பள்ளத்தில் இருந்து புழுதி பறப்பதால் மக்கள் நிம்மதியாக ஷாப்பிங் செல்ல முடியவில்லை. அதனால், மதுரை மாசி வீதிகளில் தீபாவளி வியாபாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்தனர். அவர்கள், தற்காலிகமாக இந்தப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக இந்து தமிழ் ஆன்லைனில் செய்தி வெளியானது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை வர்த்தகத்திற்காக 4 மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் சாலை மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள் வரும் 15-ம் தேதி முதல் 1 மாதத்திற்கு நிறுத்தப்படுகிறது. அதனால், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாநகராட்சி பொறியாளர் அரசிடம் கேட்டபோது, ‘‘15-ம் தேதிக்குள் மாசி வீதிகளில் நடக்கும் பணிகளை முடிந்தளவு முடிக்க இரவு, பகலாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.
தீபாவளி வியாபாரத்திற்காக பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தொந்தரவு ஏற்படாத வகையில் முடியாத பணிகளை, ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கிறோம். நவம்பரில் தீபாவளி முடிந்த பிறகு பணிகள் மீண்டும் தொடங்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT