Published : 31 May 2014 09:25 AM
Last Updated : 31 May 2014 09:25 AM

பொறியியல் கவுன்சலிங் ஜூன் 23-ல் தொடக்கம்: ஜூன் 16-ல் ரேங்க் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. கல்லூரியை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் 23-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீடு) பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜூன் 11-ல் ரேண்டம் எண்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 11-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும். அதைத்தொடர்ந்து, ரேங்க் பட்டியல் ஜூன் 16-ல் வெளியிடப்படும்.

இதற்கிடையே, விளையாட்டு வீரர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13-ம் தேதி தொடங்கி 16-ல் முடிவடையும். அவர்களுக்கு ரேங்க் பட்டியல் ஜூன் 17-ம் தேதி வெளியாகும். கவுன்சலிங் 23, 24-ம் தேதிகளில் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் 25-ல் கவுன்சலிங் நடக்கும்.

பொது கவுன்சலிங் எப்போது?

பொது கவுன்சலிங் ஜூன் 27-ல் தொடங்கி ஜூலை 28-ம் தேதி முடிவடையும். இதேபோல், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூலை 9-ம் தேதி தொடங்கி 20-ல் நிறைவடையும்.

இவ்வாறு ரைமன்ட் உத்தரியராஜ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x