Published : 10 Oct 2020 04:24 PM
Last Updated : 10 Oct 2020 04:24 PM
காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்சத்திரத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான 177.77 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் பெயரில் பட்டா வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
“காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட பாப்பான்சத்திரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி திருக்கோயிலுக்கு 1884 ஆம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி விநாயகா என்பவர் அவருக்குச் சொந்தமான 177.77 ஏக்கர் நிலங்களை உயில் எழுதி வைத்தார்.
அதை பத்திரப்பதிவு செய்திருந்தாலும், 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் சென்னை உயர் நீதிமன்றத்தால் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் உதவி செட்டில்மென்ட் அதிகாரி முன்பு கோயில் நிர்வாகத்தினர் ஆஜராகி பட்டா கோரினேன். 1956 முதல் அது அனாதீனமான நிலமாக அறிவிக்கப்பட்டதால் பட்டா வழங்க மறுக்கின்றனர்.
கோயில் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படாதது குறித்தும், கோயில் பெயரில் பட்டா வழங்கக் கோரியும், புற சொத்துகளைக் கண்டறியக் கோரியும் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழக அரசு, வருவாய்த்துறை, பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
கோயிலுக்குச் சொந்தமாக இருங்கோடை மற்றும் பழஞ்சூர் கிராமங்களில் உள்ள சொத்துகளை மீட்க வேண்டும், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துணைபுரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆகஸ்ட் 17-ம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT