Published : 10 Oct 2020 03:39 PM
Last Updated : 10 Oct 2020 03:39 PM

ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் உட்கார வைத்த விவகாரம்; மார்க்சிஸ்ட் கண்டனம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

கடலூர் மாவட்டத்தில் பட்டியலின சாதியைச் சார்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (அக். 10) வெளியிட்ட அறிக்கை:

"கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த தெற்குதிட்டை ஊராட்சி மன்றத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பட்டியலின சாதியைச் சார்ந்த ராஜேஸ்வரி தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற முறையில் பணியாற்ற விடாமல் தடுக்கப்பட்டுள்ளார். ஊராட்சி மன்றக் கூட்டத்தில் மற்றவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க ஊராட்சிமன்றத் தலைவரான இவர் தரையில் அமர்ந்து செயல்பட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று இவர் கொடியேற்றவும் அனுமதிக்கப்படவில்லை என அறிய முடிகிறது. இவரோடு இன்னொரு ஊராட்சிமன்ற உறுப்பினராக உள்ளவரும் இதேபோன்று அவமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கேள்விப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறை உடனடியாக தலையிட்டு சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்ற துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் அவமதிக்கப்படுவது, தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்படுவது, ஊராட்சிமன்றத் தலைவர் என்ற முறையில் கடமையை ஆற்றவிடாமல் தடுப்பது தொடர் சம்பவங்களாகி வருகின்றன. இத்தகைய சம்பவங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஏற்கெனவே, 15-க்கும் மேற்பட்ட இதுபோன்ற சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், இச்சம்பவங்கள் குறித்து விபரம் அறிந்த பின்னரும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இத்தகைய சம்பவங்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே தொடர்ந்து நடைபெறுவதாகக் கருத வேண்டியுள்ளது.

எனவே, இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப் பதிவு செய்த அனைத்து இடங்களிலும் குற்றமிழைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளையும் வழக்கில் குற்றவாளிவளாகச் சேர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x