Published : 10 Oct 2020 12:27 PM
Last Updated : 10 Oct 2020 12:27 PM

ஜப்பானிய தொழில்நுட்பத்தில் சம்பங்கிப்பூ சாகுபடி: அதிக லாபம் கிடைப்பதாக புன்செய் புளியம்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி

புன்செய்புளியம்பட்டி பகுதியில் ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றி நிலப்போர்வை போர்த்தி சம்பங்கி மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

ஈரோடு

ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சம்பங்கி மலர் சாகுபடி செய்வதால், கூடுதல் மகசூல் கிடைப்பதாகவும், சம்பங்கி மலருக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி பகுதி விவசாயிகள் சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வந்தனர். தற்போது இப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் சம்பங்கி மலர் சாகுபடிக்கு மாறியுள்ளனர். மாலைகள் கட்டுவதற்கும், அனைத்து விதமான விழாக்களுக்கும் பயன்படுத்தப்படும் சம்பங்கி மலரின் தேவை எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறது. இதனால், அதிக பணம் மற்றும் தினசரி வருமானம் ஈட்டித் தரும் மலர் பயிர்களில் சம்பங்கி முக்கியப் பயிராக மாறியுள்ளது.

சம்பங்கி சாகுபடியில் தற்போது புதிய தொழில் நுட்பத்தை கடைபிடிப்பதால், கூடுதலாக மகசூல் கிடைப்பதாகக் கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

சம்பங்கி விதையை (கிழங்கு) நிலத்தில் பதித்து, அதன் மேலே நிலப் போர்வை போர்த்தி விடுவதால், களைகள் மற்றும் பூச்சிகள், பாம்புகள் வருவதில்லை. மேலும் சொட்டு நீர்ப் பாசன முறையைப் பின்பற்றி வருவதால், எப்போதும் கிழங்கு ஈரத்திலேயே இருக்கிறது. நோய்களும் தாக்குவதில்லை. ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும் இந்த தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதால், நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்தே தினமும் மலர்களைப் பறிக்கத் தொடங்கலாம்.

அதிகாலையில் சந்தைக்கு வந்தடையும் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மூன்றாவது மாதத் தொடக்கத்தில் ஒரு கிலோ, இரண்டு கிலோ எனப் படிப்படியாக உயர்ந்து 160 கிலோ (எழுபது சென்ட் நிலப்பரப்பில்) வரை மகசூல் கிடைக்கிறது. மலர்சந்தையில் சராசரியாக ஒரு கிலோ பூவிற்கு ரூ.100 வரை கிடைக்கிறது.

ஒரு ஏக்கருக்கு சராசரியாக ரூ.2 லட்சம் செலவாகிறது. இத்தொகையை ஓராண்டில் எடுத்து விட முடிகிறது. அதன்பிறகு செலவு செய்ததைவிட இரண்டு மடங்கு லாபம் கிடைக்கிறது. இந்த பயிரை நன்றாகப் பராமரித்தால் ஐந்தாண்டு வரை லாபம் ஈட்டலாம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x