Published : 09 Oct 2020 08:00 PM
Last Updated : 09 Oct 2020 08:00 PM
ஆன்லைன் வழியாக சாதாரண மக்களுக்குச் சுலபமாக மணல் கிடைக்காத நிலையில் அரசு ஏன் மணல் குவாரியை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டுக்கோட்டை தங்கவேல், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்குக் குறைந்த விலையில் மணல் விற்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மணல் இணையதளத்தில் பொதுமக்கள் நுழைவு மற்றும் லாரி உரிமையாளர்கள் நுழைவு என 2 நுழைவுகள் உள்ளன.
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் நுழைவு வழியாக மணலுக்கு முன்பதிவு செய்யலாம். பல நேரங்களில் இணையதளத்தில் பொதுமக்கள் நுழைவு திறப்பதில்லை. அப்படியே இணைய தளத்திற்குள் நுழைந்தாலும் மணல் முன்பதிவு முடிந்துவிட்டதாக வருகிறது. இதனால் பொதுமக்கள் மணல் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
அதே நேரத்தில் லாரி வைத்திருப்பவர்கள், இடைத்தரகர்களுக்கு மணல் சுலபமாகக் கிடைக்கிறது. அவர்கள் அரசிடம் ரூ.6500-க்கு மணல் வாங்கி ரூ.40,000-க்கு விற்பனை செய்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு வழியாகக் குறைந்த விலைக்கு மணல் விற்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், ''ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4.30 மணிக்கு பொதுமக்கள் ஆன்லைனில் மணலுக்காக முன்பதிவு செய்யலாம். இருப்பில் உள்ள மணல் அளவைப் பொறுத்தே முன்பதிவு செய்ய முடியும். தற்போது மணல் இருப்பு போதுமானதாக இல்லை. முன்பதிவு செய்வோரின் இருப்பிடத்தைப் பொறுத்து மணல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வீடுகளுக்கே சென்று மணல் விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ''சாதாரண மக்களுக்குச் சரியான விலையில் மணல் கிடைப்பதில்லை. ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மணல் இடைத்தரர்களால் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. ஆன்லைனில் சாதாரண மக்களுக்குச் சுலபமாக மணல் கிடைக்காத நிலையில் அரசு ஏன் மணல் குவாரியை நடத்த வேண்டும். மணல் குவாரிகளை மூடிவிடலாமே?'' என்றனர்.
மேலும், ''இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் பொதுமக்களுக்கு உரிய விலையில் மணல் கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும். வரைபட அனுமதி வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து இலகுவாக மணல் கிடைக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை அக்.28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT