Published : 09 Oct 2020 03:18 PM
Last Updated : 09 Oct 2020 03:18 PM
புதுச்சேரியில் இன்று புதிதாக 371 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 9) கூறும்போது, "புதுச்சேரியில் 5,006 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 287, காரைக்கால் - 53, ஏனாம் - 8, மாஹே- 23 என மொத்தம் 371 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 558 ஆக உயர்த்துள்ளது. இறப்பு விகிதம் 1.81 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 30 ஆயிரத்து 904 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,397 பேர், காரைக்காலில் 502 பேர், ஏனாமில் 56 பேர், மாஹேவில் 155 பேர் என 3,110 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் புதுச்சேரியில் 1,439 பேர், காரைக்காலில் 92 பேர், ஏனாமில் 78 பேர், மாஹேவில் 84 பேர் என 1,693 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,803 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 247 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் 17 பேர், மாஹேவில் 16 பேர் என மொத்தம் 287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 543 (82.65) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரத்து 18 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 598 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
கடந்த 7 மாதங்களாக அரசு மருத்துவமனைகளில் கரோனா மருத்துவம் மட்டுமே பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே, வரும் திங்கள்கிழமை மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
அதில், கரோனா நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிப்பது குறித்தும், கரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் பேச உள்ளேன்.தற்போது கரோனா உயிரிழப்பு குறைந்துள்ளது. ஆகவே, உயிரிழப்பை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
தற்போது கேரளாவில் கரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. அதனுடைய தாக்கம் மாஹேவில் இருக்கிறது. அங்கு இதுவரை எந்தவித பெரிய பாதிப்பும் இல்லை. படுக்கை வசதிகளும் இருக்கின்றன. எனவே, அங்கு மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.
கடந்த 7 மாதங்களாக அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். மற்ற மாநிலங்களில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்குக் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கியுள்ளனர். ஆனால், நம்முடைய மாநிலத்தில் நிதிநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அது குறித்து நம்மால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
அதேபோல், சுகாதாரப்பணியாளர்களை அரசு சார்பில் கவுரவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்தேன். அவரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கவுரவிக்க கூறினார். ஆனால், நவம்பர் 1 அல்லது ஜனவரி 26-ம் தேதி கவுரவிக்க வேண்டும் என்று நான் தெரிவித்துள்ளேன். சுகாதாரத்துறையின் கீழ்நிலை பணியாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரையும் கவுரவித்து சான்று மற்றும் கேடயம் வழங்க வேண்டும்.
நிதி நிலைமையைப் பொருத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இது குறித்தும் திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவையில் பேசுவேன்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT