Published : 09 Oct 2020 03:15 PM
Last Updated : 09 Oct 2020 03:15 PM
திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மருத்துவர் சமூக நலச் சங்கம்- முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் இன்று சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டது.
கடந்தாண்டு திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரின் 12 வயது மகள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கடந்த செப். 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததைக் கண்டித்து அக்.9-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம்-முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (அக். 09) திருச்சி மாவட்டத்தில் 2,500-க்கும் அதிகமான சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டங்களில், "சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.
மண்ணச்சநல்லூரில் எதுமலை சாலை சந்திப்பில் சங்கக் கிளைத் தலைவர் செந்தில்குமார் தலைமையிலும், சமயபுரம் கடைவீதி நுழைவுவாயில் அருகே சங்கக் கிளைத் தலைவர் ரங்கபிரபு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல், சங்கத்தின் மாநகர் மாவட்டம் சார்பில் தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் அருகே சிறுமியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
மேலும், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமையில், திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT