Published : 09 Oct 2020 02:19 PM
Last Updated : 09 Oct 2020 02:19 PM

உடல்நிலையில் முன்னேற்றம்; மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்

சென்னை

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இத்தகவலை தனியார் மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

சாதாரணப் பொதுமக்களிலிருந்து விவிஐபிக்கள் வரை அனைவரும் கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து பலரும் வெளியில் வருவதில்லை. அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஏற்கெனவே உடல்நலம் பாதித்திருந்த நிலையில் முற்றிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்திருந்தார். ஆனாலும், அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தொண்டர்களைக் கவலையடையச் செய்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த செப்.22-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், 29-ம் தேதி பிரேமலதாவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த இருவரும் கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு விஜயகாந்துக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அக்.7-ம் தேதி தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “விஜயகாந்த் இரண்டாம் கட்டப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பூரண் உடல்நலம் தேறிய நிலையில் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியில், “விஜயகாந்த் மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பின் மூலம் அனைத்துக் கதிரியக்கப் பரிசோதனைகளிலும் நல்ல முன்னேற்றமடைந்ததை அடுத்து, அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x