Published : 09 Oct 2020 11:56 AM
Last Updated : 09 Oct 2020 11:56 AM

தனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக ஆவினில் 20 ரூபாய்க்கு தயிர் விற்பனை

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவினில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள தயிர். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

தனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக ஆவினில் ரூ.20 விலையில் பிளாஸ்டிக் கப்பு களில் ஆவின் கெட்டித் தயிர் விற்பனைக்கு வந்துள்ளது.

வேலூர் ஆவினில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால், பாக்கெட்டு களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், ஆவின் பால் பொருட்கள் உபப் பொருட்கள் உற்பத்தியும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, ஆவின் மைசூர்பா, பால்கோவா, டேட்ஸ் கோவா, குல்பி ஐஸ், மில்ஷே க், பாதாம் பால் பவுடர் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கது. அதே போல், ஆவின் மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

கடைகளில் 500 மி.லி கொண்ட பாக்கெட் தயிரின் காலாவதி தேதியும் குறைவாக இருந்ததால் சீக்கிரம் தயிர் பாக்கெட்டுகள் பந்துபோல் (புளித்துபோதல்) மாறுவதால் வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்துவது தெரியவந்தது. இதற்கு, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில், 200 மி.லி கப்பில் கெட்டித் தயிர் ஆவினில் அறிமுகம் செய்துள்ளனர். தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டு ரூ.20 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கெட்டித் தயிர் கப்புகள் விற்பனை அதிகரித்து வருகிறது. 5 நாட்கள் கெடாமல் இருக்கும் என்பதால், வரும் நாட்களில் ஆவின் கெட்டித் தயிர் விற்பனையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வேலூர் ஆவின் பொதுமேலாளர் டாக்டர் கணேசா கூறும்போது, ‘‘வேலூரில் ஆவினில் இருந்து தினசரி 8 ஆயிரம் லிட்டர் அளவுக்கு தயிர் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, 200 மி.லி கெட்டித் தயிர் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதை ரூ.10 விலையில் 100 மி.லி அளவுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x