Published : 05 Sep 2015 10:44 AM
Last Updated : 05 Sep 2015 10:44 AM
கல்வியின் அருமை ஆசிரியர்களுக்கு அதிகம் தெரியும். அதில் சற்று வித்தியாசமான அனுபவம் கொண்டவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ். 13 வயதில் படிப்புக்கு முடிவு கட்டி வேலைக்கு துரத்தப்பட்டவர். பின்னர் குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டு ஆசிரியராக உயர்த்திக் கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையம் புதூரைச் சேர்ந்த ராமுக்குட்டி - மங்கம்மாள் தம்பதியின் மகன் ஆர்.கனகராஜ். தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் குடும்பச் சூழ்நிலை காரணமாக 13 வயதில் தோட்ட வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். பின்னர் பல வகைகளில் முயற்சித்து, கல்வியறிவை பெற்று கடந்த 9 வருடங்களாக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒருவேளை சாப்பாட்டுக்காக படிப்பைத் துறக்க வேண்டிய நிலை முன்பு இருந்தது. இப்போது அந்த படிப்பே தன்னை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளியான அப்பாவால், ஒரு கட்டத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. 7-ம் வகுப்பு படிக்கும் போதே மொத்த குடும்ப பாரத்தையும் சுமக்க வேண்டிய நிலை எனக்கு வந்தது. வேறு என்ன செய்ய முடியும்? கனத்த மனதுடன் பள்ளியிலிருந்து நின்று விட்டு, முழு நேரமாக தோட்ட வேலைக்கு செல்ல தொடங்கினேன். சுமார் ஒரு வருடம் கடந்திருக்கும் அந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறை திட்ட அலுவலர்களால் மீட்கப்பட்டேன்.
உதவித்தொகையுடன் அவர்கள் கொடுத்த சிறப்புப்பள்ளிக் கல்வி முறை எனது கல்வி ஆர்வத்தை அதிகப்படுத்தியது. பணிகளிலிருந்து மீட்கப்படும் குழந்தைகள் மீண்டும் வேலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக, குமரபுரம் சிறப்புப் பள்ளியில் வித்தியாசமான வகுப்புகள் எடுப்பார்கள். அது வெறும் பாடமாக இல்லாமல் எனக்கு அனுபவப் பாடமாக இருந்தது.
என்னைப் போலவே வேலைக்குச் சென்று மீட்கப்பட்ட குழந்தைகளின் உலகத்தை அங்கு பார்க்க முடிந்தது. ஆர்வம் காரணமாக அடுத்தடுத்து இடைவிடாது பள்ளிப் படிப்பை முடித்தேன். 2003-ல் கோவை ஆட்சியராக இருந்த முருகானந்தம் உதவியுடன் ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்தேன். வசதி வாய்ப்புகள் குறைந்த மலைவாழ் மக்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டுமென முடிவு செய்து பில்லூர் அணைப்பகுதி ஆதிவாசி பள்ளிக்கு பணிவாய்ப்பை கேட்டு வாங்கினேன். பின்னர் பரலி, அத்திக்கடவு ஆதிவாசி குழந்தைகள் பள்ளிகளில் பணியாற்றிவிட்டு, கடைசியாக கடந்த 9 ஆண்டுகளாக ஆலத்தி வச்சினம்பாளையம் பள்ளியில் பணியாற்றுகிறேன்.
மாணவன், வறுமையால் பள்ளியை விட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்படுவதை ஏற்க முடியாது. வறுமையை விட, பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லாததும், சமூக பொருளாதாரச் சூழலும் தான் கல்விக்கு தடையாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். என்னைப் போல, ஒரு குழந்தை படிப்பை பாதியில் விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். ஏழை, எளிய மாணவர்களுக்கு முடிந்த வரை உதவிகளைச் செய்வது, கல்வியறிவுடன் கூடிய பொது அறிவும் தேவை என்பதால் பள்ளியில் வாசகர் வட்டம், களப்பணிகள் உள்ளிட்டவற்றை நாங்கள் முன்னின்று நடத்துகிறோம். மகாத்மா ஜோதிபா பூலே பெயரில் 8 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி மையம் ஒன்றையும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இணைந்து நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு மட்டும் இந்த மையத்தில் பயிற்சி முடித்த 11 பேர் பணியில் சேர்ந்துள்ளனர் என்றார்.
கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு மாணவர்கள் தொழிலாளர்களாகும் சூழலில், குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டவர் ஆசிரியராகி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT