Published : 08 Oct 2020 10:07 PM
Last Updated : 08 Oct 2020 10:07 PM
சென்னை ஆயிரம் விளக்கில் வாடகை பிரச்சினையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த 50 பேர் கொண்ட ஒரு கும்பல், கடையைச் சூறையாடி பொருட்களைத் திருடிச் சென்றது. பொதுமக்கள் புகாரின்பேரில் அங்கு வந்த போலீஸார் 20 பேரைப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கில் பல்பொருள் அங்காடி ஒன்றில் புகுந்த கும்பல், பொருட்களை அடித்துச் சூறையாடி, ஊழியர்களையும் தாக்கியதோடு, சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர் என நினைத்து கம்யூட்டர் சிபியூவை தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் தி ஆர்ஜின் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்படுகிறது. இன்று மதியம் வழக்கம்போல் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். வாடிக்கையாளர்கள் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென 50 பேர் கொண்ட ஒரு கும்பல் கையில் தடி, கட்டைகளுடன் புகுந்தது.
உள்ளே நுழைந்தவர்கள் முதலில் சிசிடிவிகளை அடித்துச் சேதப்படுத்தினர். இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அடித்துப் பிடித்து வெளியே ஓடினர். இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கும்பல் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடினர்.
தடுக்க முயன்ற கடையில் இருந்த ஊழியர்களையும் அந்தக் கும்பல் தாக்கியது. பழம், காய்கறிகள் உட்பட உணவுப்பொருட்களைச் சேதப்படுத்தியது. இதை அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். சிலர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் கொடுத்தனர். இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத அந்தக் கும்பல் கடையை அடித்துத் துவம்சம் செய்துவிட்டுக் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவியது.
அதற்குள் ஆயிரம் விளக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அந்தக் கும்பல் தப்பி ஓடியது. போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதில் தப்பிக்கப் பார்த்த, கடைக்குள் தகராறு செய்து கொண்டிருந்தவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோரை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இவர்கள் தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதல் பற்றி போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த சூப்பர் மார்க்கெட்டை ஷாநவாஸ் என்பவர் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார் என்றும், அவருக்கும், கட்டிட உரிமையாளரான ரஃபிகா என்பவருக்கும் கடையைக் காலி செய்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது என்றும் தெரியவந்தது. அதில் ஏற்பட்ட பிரச்சனைதான் தாக்குதலுக்குக் காரணமா? என போலீஸார் விசாரிக்கின்றனர்.
மாதம் ரூ.4.5 லட்சம் வாடகை என பல்பொருள் அங்காடியை 8 வருடங்கள் நடத்த ஷாநவாஸ் ஒப்பந்தம் போட்டதாகவும், திடீரென கட்டிட உரிமையாளர் கூடுதலாக ஒரு லட்சம் கேட்டும், குறித்த காலத்திற்குள் காலி செய்யச் சொல்லி வற்புறுத்தியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குத் தொடரப்பட்டு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
பிடிபட்ட 20 பேரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் சூப்பர் மார்க்கெட்டைச் சூறையாடிய கும்பலில் முக்கியமான நபர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் பொறுப்பு வகிப்பவர்கள் என்பதும், டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த அவர்களே ஆட்களைக் கூட்டி வந்து தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
இவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் இந்தச் செயலில் ஈடுபட்டனர், இடத்தின் உரிமையாளருக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்கள் சிசிடிவி காட்சியில் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளனர். அதனால்தான் கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். அதன் பதிவுகளும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்படும் டிவிஆர் என நினைத்து கம்பியூட்டர் சிபியூவைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
தற்போது சிசிடிவி காட்சிகளின் டிவிஆரை போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து தப்பி ஓடிய 30 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
வட மாநிலங்களில் இதுபோன்று கட்டைகளைக் கொண்டு வந்து கும்பலாக கடைக்குள் புகுந்து சூறையாடுவார்கள். தற்போது அதே கலாச்சாரம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பரவுவது சட்டம் ஒழுங்குக்கு நல்லதல்ல என அங்கிருந்த பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT