Published : 08 Oct 2020 08:56 PM
Last Updated : 08 Oct 2020 08:56 PM

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஒன்றுபட்டுக் குரல் கொடுத்த 10 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் பாராட்டுக் கடிதம்

சென்னை

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு முன்மொழிந்த கடன்பெறும் இரண்டு வழிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து ஒற்றுமையாக கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சிக்காகப் போராடும் 10 மாநில முதல்வர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மாநில உரிமைகளுக்காக மத்திய அரசிடம் போராடும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பத்து மாநில முதல்வர்களைப் பாராட்டி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

“கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு முன்மொழிந்த கடன்பெறும் இரண்டு வழிகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு, தமிழக மக்கள் சார்பில் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்த ஒருங்கிணைந்து செயல்படும் உங்களது முயற்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை.

மாநிலங்களுக்கு நிதியை வழங்க வேண்டியது, மத்திய அரசின் தார்மீக மற்றும் சட்டரீதியான கடமையாக இருக்கும்போது, அவர்களால் வழங்கப்படாத நிதிக்குப் பதிலாக நம்மைக் கடன் வாங்கிக் கொள்ளுமாறு முன்மொழிவது, மாநிலங்களுக்கான உரிமை மற்றும் நீதியைப் பரிதாபத்திற்கு உள்ளாக்குவதாகும்.

மேலும், 2017–18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் மட்டும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக் கணக்கில் இருந்து ரூ.47,272 கோடியை, சட்டத்திற்குப் புறம்பாக, இந்தியத் தொகுப்பு நிதிக்கு (Consolidated Fund of India) மத்திய அரசு மாற்றியுள்ளதை, 2018-19 நிதியாண்டுக்கான சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த நிதியாண்டிலும் (2019 -20) இதேபோல் சட்டத்திற்குப் புறம்பான மாற்றங்கள் (Illegitimate transfers) நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்தத் தவறான நடவடிக்கையை மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும், (ரூ.47,272 கோடியை இந்தியத் தொகுப்பு நிதியில் இருந்து இழப்பீட்டு நிதியில் மீண்டும் சேர்ப்பதன் மூலம்) கூடிய விரைவில் அதனைச் சரி செய்துவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த உண்மையின் அடிப்படையில், சிஏஜி அமைப்புக்கு அளித்த உறுதி மற்றும் அதன் கடமையில் இருந்து மத்திய அரசு தவறாமல், இழப்பீட்டுத் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்துவதையும், அந்தத் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதையும் தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசு சட்டப்படி வழங்குவதற்குத் தேவையான கூடுதல் நிதியை, சந்தையிலிருந்தோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்தோ, அதனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பை ஏற்று, மத்திய அரசு, இழப்பீட்டுக் கணக்கிற்கு நேரடியாகக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தங்களுடைய இதுவரையிலான முயற்சிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, தமிழக அரசு தன்னுடைய சொந்த மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காக மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் போராட்டம் வீண்போகாது”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x