Published : 08 Oct 2020 07:37 PM
Last Updated : 08 Oct 2020 07:37 PM
மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியுள்ளது குறித்து வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்நாட்டு ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வின்கெம் என்ற ஆய்வகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த மனுவில், புதிய மருந்துகள் கண்டுபிடிக்க அரசு முறையாக ஒத்துழைப்பு அளிப்பது இல்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று (அக். 08) விசாரித்த நீதிபதி கிருபாகரன், மனுதாரர் நிறுவனத்துக்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்க மத்திய அரசின் நிதித்துறை மற்றும் மருந்துத் துறையின் இணைச் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டார்.
மேலும், நீதிபதி தனது உத்தரவில், மருத்துவத் துறை ஆய்வுகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், உரிய முதலீடும், ஊக்கமும் அளிப்பதில்லை என்பதால், பல நிபுணர்கள் வெளிநாடு சென்றுவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆராய்ச்சிகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் திறமை வாய்ந்த பலரை நாம் ஏற்கெனவே இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதி, ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளித்து மனுதாரர் போல, நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னோடியாக இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட நீதிபதி, தற்போது மருத்துவ மூலப்பொருள்களுக்கு 90 விழுக்காடு வரை அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளதால், தரம் குறைந்த மருந்துகளும் விற்பனைக்கு வருகிறது எனவும் வேதனை தெரிவித்தார்.
இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பது, தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒரே நாட்டை மட்டுமே நம்பியுள்ளது என்பது அண்டை நாட்டின் அத்துமீறலையும், பாதுகாப்பையும் திறமையாகச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT