Published : 08 Oct 2020 07:25 PM
Last Updated : 08 Oct 2020 07:25 PM
கரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த ஆயிரக்கணக்கான சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் செயல்பட்டு வரும் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, விருப்பம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு தேர்வு எதுவும் எழுதத் தேவை இல்லை. கல்வித்தகுதி உள்ளிட்ட அதிகபட்ச தகுதிகளும் இல்லாத நிலையில், தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் விண்ணப்பித்து நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில் தேர்வு நடைமுறை ஒத்தி வைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வுப் பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றுப் பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகின்றன''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT