Published : 08 Oct 2020 05:38 PM
Last Updated : 08 Oct 2020 05:38 PM
தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் 1981-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி டி.வளவனூரைச் சேர்ந்த எம்.அமர்நாத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் எஸ்.சி. பட்டியலில் இந்து பள்ளர் வகுப்பை சேர்ந்தவன். எஸ்சி பட்டியலில் உள்ள 76 ஜாதிகளில் பள்ளர் வகுப்பினர் தான் அதிகளவில் உள்ளனர். 1981 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி பள்ளர்கள் 27.60 சதவீதம் பேர் உள்ளனர். பறையர் வகுப்பினர் 22.96 சதவீதம் பேர் உள்ளனர்.
தமிழகத்தில் எஸ்சி பட்டியலில் உள்ள பள்ளர், குடும்பன், தேவேந்திரகுலத்தான், கடையன், பன்னாடி மற்றும் காலாடி ஆகிய வகுப்புகளை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கி, 6 வகுப்புகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு 4.3.2019-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. எஸ்சி பட்டியலில் ஒரு ஜாதியை சேர்க்கவோ, நீக்கவோ, பிரிக்கவோ நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உண்டு. இது தொடர்பாக குடியரசு தலைவர் தான் அறிவிப்பாணை பிறப்பிக்க முடியும். எஸ்சி பட்டியலில் இருந்து 6 ஜாதியை நீக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது.
அரசியல் கட்சியின் தலைவர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை தொடர்பாக எந்த வரலாற்று ஆவணங்களும் சமர்பிக்கப்படவில்லை. எனவே, தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பான ஆய்வுக்கு குழு அமைத்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், குடியரசு தலைவர் அதிகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எஸ்சி பட்டியல் திருத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு, அதுவும் குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்றார்.
அப்போது நீதிபதிகள், மாநிலத்தில் உள்ள நிலவரம் மாநில அரசுகளுக்கு தான் தெரியும். அதை டில்லியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது. இப்போது குழு மட்டும் தான் அமைத்துள்ளனர். குழு கோரிக்கையை ஏற்காவிட்டால் மாநில அரசு எந்த முடிவும் எடுக்காது என்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. குழுவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர அவசியம் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் குழு அமைக்கப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை மனுதாரர் தரப்பும், 1981-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலை அரசு தரப்பு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை அக். 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT