Published : 08 Oct 2020 03:32 PM
Last Updated : 08 Oct 2020 03:32 PM
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அக். 17-ல் தொடங்குகிறது. 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்தார்.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா வரும் 17.10.2020 முதல் 28.10.2020 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டுதலின்படி கோயிலின் உள்ளே பக்தர்கள் வந்து வழிபட எந்தத் தடையும் இல்லை. அதேபோன்று கோயிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை.
17.10.2020 அன்று நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சி, 26.10.2020 அன்று நடைபெறும் தசரா சூரசம்ஹார நிகழ்ச்சி இவை அனைத்தும் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
அதேபோல் 27.10.2020 அன்று திருவிழா முடியும் நாள் அன்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 18.10.2020 முதல் 25.10.2020 வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் என தினசரி 8,000 பக்தர்களுக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
26.10.2020 அன்று நடைபெறும் தசரா சூரசம்ஹார நிகழ்ச்சிகள் கடற்கரைப் பகுதியில் நடைபெறாது. இவை அனைத்தும் கோயில் பிரகார பகுதியிலேயே நடத்தப்படும்.
அன்றைய தினம் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இந்த முறை கடற்கரை பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்ற எதற்கும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை.
மேலும் பக்தர்கள் கோயிலுக்கு வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்தப் பகுதியில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதேபோன்று திருவிழா நேரத்தில் அந்த பகுதியில் கடைகள் அமைப்பதற்கு இந்த முறை அனுமதி கிடையாது. வழக்கமாக இந்த திருவிழாவின் போது கிராம பகுதிகளில் உள்ள தசரா குழுக்களுக்கு கொடியேற்றத்துக்கு பிறகு ஒவ்வொரு குழு சார்பாக நிர்வாகிகள் காப்பு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறும்.
இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் ஒரு குழுவுக்கு இரு நிர்வாகிகள் என்ற வீதத்தில் வந்து தங்கள் குழுக்களுக்கான காப்பு கயிறுகளை கோயில் அலுவலகத்தில் உரிய அத்தாட்சி கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்யாத தசரா குழுக்கள் கோயில் நிர்வாகத்தை அணுகி உடனடியாக 09.10.2020 முதல் 14.10.2020-க்குள் பதிவு செய்திட வேண்டும்.
மேலும், கோயில் நிர்வாகத்தின் மூலம் புதியதாக பதிவு செய்தவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு காப்புகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோயில் பகுதிக்கு வருகை தர அனுமதி இல்லை. பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
தினசரி நடைபெறும் பூஜைகளில் உபயதாரர்கள், மண்டகபடிதாரர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். பூஜை முழுவதையும் உட்கார்ந்து பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மேலும் காவல் துறை சார்பாக திருவிழாவின்போது 1500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் காவல் துறையின் மூலம் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டு அங்கிருந்து கோயிலுக்கு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருவிழா தொடர்பான 12 நாள் நிகழ்ச்சிகளும் பக்தர்களின் வசதிக்காக யூடியுப் சேனல் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்திட கோயில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக மற்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவை காண வருகை தருவார்கள். இந்த முறை அவற்றை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால் வெளியூர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது. குலசேகரன்பட்டினத்தில் அவர்கள் தங்குவதற்கு அனுமதியும் கிடையாது. எனவே பக்தர்கள் நேரடியாக வருவதை தவிர்த்து யூடியுப் சேனல் மற்றும் தொலைக்காட்சிகளில் மூலம் திருவிழாவினை காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் மக்கள் அதிகமாக கூடும்போது கரோனா பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் வெளிமாநில மக்கள் வருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேங்காய், பழம், பூ என எந்தவொரு பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் கண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனிருந்தார்.
முன்னதாக குலசேகரன்பட்டினம் தசரா விழா ஏற்பாடுகள் குறித்து பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், தசரா குழுவினர், விழாக் குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, கோயில் தக்கார் ரோஜாலி சுமதா, செயல் அலுலர் ரத்தினவேல்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT