Published : 27 May 2014 10:09 AM
Last Updated : 27 May 2014 10:09 AM

மாநிலத்தில் தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதை மத்தியில் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியாக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதை, மத்திய அரசின் சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியாகக் கருத முடியாது என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பரவக்கோட்டையைச் சேர்ந்த ஆர்லெட்சுமி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் கணவர் ராமசாமி, சுதந்திரப் போராட்ட வீரர். அவர் 1969-ம் ஆண்டு முதல் மாநில அரசு வழங்கும் தியாகிகள் ஓய்வூதியம் பெற்று வந்தார். 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி அவர் இறந்த பிறகு, எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு வழங்கும் தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு என் கணவர் 1972-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.

இதுவரையில் அவருக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்கப்படவே இல்லை. எனவே, 1972-ம் ஆண்டிலிருந்து அவர் இறந்த 2008-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியமும், பின்னர் எனக்கு மத்திய அரசின் குடும்ப ஓய்வூதியத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, தியாகிகள் ஓய்வூதியத் திட்டம் 1972-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியமும், அவர்களின் இறப்புக்குப் பிறகு சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 1980-ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக குறைந்தபட்சம் 6 மாதம் சிறையில் இருந்தவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்துள்ளார். தேசிய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றுள்ளார். ஆனால், சிறையில் இருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்குச் சென்றவர்களுக்கு மட்டுமே மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு சிறையில் இருந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரரின் கணவர் தொடர்பான எந்த ஆவணங்களும் மத்திய அரசில் இல்லை. ஓய்வூதியம் வழங்கும்படி தமிழக அரசும் பரிந்துரைக்கவில்லை என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மத்திய அரசின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாத நிலையில், மாநில அரசு வழங்கும் தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதை மட்டும் தகுதியாக வைத்து, மத்திய அரசும் தியாகிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதை மட்டும், மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியாகக் கருத முடியாது.

மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவதை வைத்து, மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டால் தியாகிகள் ஓய்வூதியத் திட்டத்தில் குழப்பம் ஏற்படும். மனுதாரரின் கணவர் இந்திய தேசியப் படையில் இருந்தற்கான ஆவணத்தில் அதிகாரிகளின் கையெழுத்து இல்லை.

பல்வேறு வழக்குகளில் தியாகிகளுக்கும், தியாகிகளின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பாத நிலையில், சிறையில் இருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாத சூழலில் மனுதாரருக்கு ஓய்வூ தியம் வழங்க உத்தரவிட முடியாது.

தேவையான உரிய ஆவணங்களை தாக்கல் செய்யத் தவறியதால் மனிதாபிமான அடிப்படையில் கூட ஓய்வூதியம் வழங்க உத்தரவிட முடியாத நிலையில் நீதிமன்றம் உள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப் படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x