Published : 08 Oct 2020 11:14 AM
Last Updated : 08 Oct 2020 11:14 AM

திமுக இனி தமிழகத்தில் தேறாது; மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தைக் கொள்ளையடித்தது திமுகதான் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று (அக். 08) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

பாஜக, திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

அதனை பாஜகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. பாஜக மாநிலத் தலைவர் அல்லது தமிழகத்திற்குப் பொறுப்பாளராக இருக்கக்கூடிய அகில இந்தியத் தலைவர்கள் சொன்னால்தான் நாங்கள் எங்களின் கருத்தைச் சொல்ல முடியும். பாஜகவில் உள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு, நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்வதற்குத் தயாராக இல்லை. நாங்கள் கூட்டணியை மதிப்பவர்கள். திமுக கூட்டணிக் கட்சிகளை எப்படி மதிக்கிறது என்பது தெரியும். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், கூட்டணியில் இருப்பவர்களை ஒருமையில் பேசினார். அந்தப் பாணியில் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து கட்சியின் கருத்தா என்பதைக் கட்சி மேலிடம்தான் சொல்லும்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தேமுதிக, பாமக கட்சிகள் வாழ்த்து சொல்லவில்லையே?

எல்லோரும் பண்பாடு கருதி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

வழிகாட்டுதல் குழுவில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லையே?

அகில இந்திய ரீதியில் பெண்களுக்கு உரிமை, பிரதிநிதித்துவம் கொடுத்தது அதிமுக. இன்னும் பல குழுக்கள் இருக்கின்றன. அதில் அவர்களுக்கு இடம் இருக்கும்.

முதல்வரும் துணை முதல்வரும் ஒன்று சேர்ந்திருப்பது, தமிழகத்தைக் கொள்ளையடிக்கவே என, திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே?

தமிழகத்தைக் கொள்ளையடித்து, சூறையடித்து, அதலபாதாளத்திற்குத் தள்ளியது திமுகதான். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக ஆட்சியிலிருந்த காலத்தில் ஆசியாவின் பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்துள்ளதுதான் பெரிய சாதனை. மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயு திட்டம், என விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது திமுக. திமுக எங்களை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் அதற்குத் தகுந்த பதிலடியைக் கொடுப்பார்கள். திமுக இனி தமிழகத்தில் தேறாது என்பதை மக்கள் நிரூபிப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x