Published : 08 Oct 2020 07:44 AM
Last Updated : 08 Oct 2020 07:44 AM

பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டும் விவகாரம்: பிரச்சினைக்கு தீர்வுகாண முத்தரப்பு பேச்சுவார்த்தை

தடுப்பணை பணிகள் தொடங்கி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழையசீவரம் பகுதி.படம்: எம்.முத்துகணேஷ்.

காஞ்சிபுரம்

பழையசீவரத்தில் தடுப்பணை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண ஆட்சியர் தலைமையில் ஓரிரு நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கை மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு வாயலூர், வள்ளிபுரம் தடுப்பணைகள் செங்கை மாவட்டப் பகுதியில் இடம்பெற்றன. எனவே காஞ்சிபுரம்மாவட்டத்தில் தடுப்பணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

முதலில் உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை அமைக்க திட்டமிடப்பட்டது. உள்ளாவூர் பகுதிகளை ஆய்வு செய்த பொதுப்பணித் துறையின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் குழுவினர் பழையசீவரம் அருகே தடுப்பணை அமைக்க அனுமதி வழங்கினர். அதன்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு ரூ.42.26 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

ஏற்கெனவே திட்டமிட்ட உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று சில விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அணைகட்ட தேர்வு செய்துள்ள இடம், விவசாயிகள் கோரிக்கை வைக்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பொதுப்பணி, வருவாய் துறைகளிடம் அறிக்கை கேட்டு பெற்றதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இருதரப்பினர் கருத்துகளுடன், விவசாயிகளின் கருத்துகளையும் அறிய முத்தரப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் ஓரிரு தினங்களில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளின் கருத்துகளையும் ஆட்சியர் கேட்க உள்ளார்.

இதுகுறித்து பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் கூறும்போது, “உழவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் தடுப்பணை அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. உள்ளாவூரில் தடுப்பணை அமைய வேண்டும் என்பதை நாங்கள் ஆட்சியரிடம் உறுதியாக வலியுறுத்துவோம்” என்றார்.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஏற்கெனவே பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. அங்கு பணியை உடனடியாக தொடங்கமுடியும். விவசாயிகள் சிலர் கோருவதுபோல் வேறு இடத்துக்குமாற்ற ஆட்சியர் பரிந்துரைசெய்தால், அதற்கு மீண்டும் திட்ட அனுமதி பெற வேண்டும். பின்னர் அந்த இடத்தின் நீள, அகலங்களுக்கு தகுந்தாற்போல் நிதி ஒதுக்கீடு பெற்று, புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும். இதற்கு சற்று காலம் எடுக்கலாம்” என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறும்போது, “தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. தடுப்பணை அமைக்கும் இடத்தை மாற்றி மீண்டும் அரசாணை பிறப்பிப்பது உடனடியாக ஆகக் கூடிய காரியம் இல்லை. இதனால், தடுப்பணை பணியே நின்றுவிடக் கூடிய அபாயமும் உள்ளது.

தங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் வராது என்று கருதி விவசாயிகள் சிலர் போராடி வருகின்றனர். அவர்கள் குறைகளை தீர்க்கும் வகையில் அதற்கான கால்வாய்களை பொதுப்பணித் துறையினர் அமைத்துத்தர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x