Published : 08 Oct 2020 07:23 AM
Last Updated : 08 Oct 2020 07:23 AM
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது. இத்திட்டத்தில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் தருமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறதுஎன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் மாநிலங்களின் குடிநீர், விவசாய தேவைக்கு கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கோதாவரி நதியின் பிறப்பிடம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் உள்ள த்ரயம்பகேஷ்வர் பகுதியாகும். இணைப்பு திட்டத்தின்படி, மகாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் கோதாவரியின் துணை நதியான இந்திராவதி ஆற்றில் அணை கட்டப்படும். அதில் தேங்கும் தண்ணீரை தெலங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணை, ஆந்திர மாநிலம் போலாவரம், நாகார்ஜுன சாகர் அணைகள் வழியாக கிருஷ்ணா நதிக்கு கொண்டுவந்து, பிறகு, சோமசீலா அணை, பெண்ணையாறு வழியாக காவிரிக்கு கொண்டு வருவதுதான் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம்.
கோதாவரி ஆற்றில் இருந்து ஆண்டுக்கு 1,100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் ரூ.60 ஆயிரம் கோடிமதிப்பிலான திட்டம்தான் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம். இத்திட்டத்தால், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும்.
இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இத்திட்டத்தால் பயன்பெறும் மாநில முதல்வர்களுடன் ஜல்சக்தி அமைச்சகம் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக கரோனா காலத்திலும் காணொலி மூலம் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆக. 18-ம் தேதி நடந்தகூட்டத்தில் முதல்வர் பழனிசாமிகலந்துகொண்டார். அப்போது,இத்திட்டத்தை விரைவுபடுத்துமாறும், இத்திட்டம் மூலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் வழங்குமாறும் ஜல்சக்தி துறை அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
தற்போது இத்திட்டத்தின்படி, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 83 டிஎம்சிதரப்படும். இதன் 2-ம் கட்டப் பணிகளான பிரம்மபுத்திரா, கங்கை, மகாநதி நதிகள் இணைப்பு திட்டம் முடிவடைந்த பிறகு, தமிழகத்துக்கு200 டிஎம்சி தரப்படும் என்று ஜல்சக்திஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தால் பயனடையும் மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா,தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் ஜல்சக்தி அமைச்சகம் கடந்த மாதம் காணொலியில் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது. பயன்பெறும் மாநிலங்களிடம் அதுகுறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்த பிறகு, ஜல்சக்தி அமைச்சகத்திடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி, நிதி ஒதுக்கப்பட்டு, நதிகள் இணைப்புக்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT