Published : 07 Oct 2020 08:15 PM
Last Updated : 07 Oct 2020 08:15 PM
மதுரை மாநகராட்சியில் வைகை அணை குடிநீர் திட்டம்-1, திட்டம்-2 மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
அனைத்து வார்டுகளிலும் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் அனைத்தும் தற்போதைய மாநகராட்சி, நகராட்சியாக இருந்தபோதும் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோதும் போடப்பட்டவை.
அதன்பின், புதிய குழாய்கள் மாற்றப்படவில்லை. பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில், 100 வார்டுகளிலும் உள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரு சில வார்டுகளில், பழைய குடிநீர் குழாய்கள் மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் குழாய்களுடன் பாதாள சாக்கடை குழாய்களும் சேர்ந்து செல்கிறது. பாதாள சாக்கடை குழாயில் கசிவு ஏற்படும்போது அந்த கழிவுநீர் குடிநீருடன் கலந்து விடுகிறது. மேலும், தற்போது மாநகராட்சியில் பல வார்டுகளில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியும், சேதமடைந்த பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணிகளும் நடக்கிறது.
இப்பணிகள் தரமாக நடக்காததால் கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது. புறநகர் வார்டுகளில் நகராட்சி, பஞ்சாயத்துடன் இருந்தபோது கடந்த 15 ஆண்டிற்கு முன் போடப்பட்ட பாதாள சாக்கடை தரமாக இல்லை. அதனால், அதில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கலக்கிறது. அதை மாநகராட்சி அதிகாரிகளால் நிரந்தரமாக சரி செய்ய முடியவில்லை.
அதனால், தற்போது பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. கரோனா பரவும் இந்த காலத்தில் ஏற்கெனவே மக்கள் நோய் தொற்று அச்சத்தில் வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு குடிநீரும் சுகாதாரமாக இல்லாமல் கழிவு நீர் கலந்து வருவதால் மற்ற தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
76-வது வார்டு பழங்காநத்தம் வடக்குத்தெருவை சேர்ந்த சுபா கூறுகையில், ‘‘முன்பு அவ்வப்போது குடிநீர் நாற்றம் வீசும். பிறகு சரியாகவிடும்.
ஆனால், தற்போது தொடர்ந்து 5 முறை தண்ணீர் வந்தபோது கழிவு நீரும் சேர்ந்துதான் வருகிறது. அதனால், குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது. அதை சமையலுக்கும், குடிக்கவும் பயன்படுத்த முடியில்லை.
ஏற்கெனவே வேலையில்லாமல் அன்றாட வாழ்வாதாரத்திற்கே சிரமப்படுகிறோம். தற்போது மாநகராட்சி குடிநீரை பயன்படுத்த முடியாததால் குடிநீரையும் விலை கொடுத்து வாங்கும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மாநகராட்சியிடம் பலமுறை புகார் செய்துவிட்டோம். இதுவரை கழிவு நீர் கலந்து வருவதை மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்யவில்லை’’ என்றார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சில இடங்களில் பாதாசாக்கடை கசிவு ஏற்பட்டிருக்கலாம். புகார் சொன்னால் உடனே அது சரிசெய்யப்படும். பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்கள் மாற்றப்படுகிறது, ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT