Published : 07 Oct 2020 07:06 PM
Last Updated : 07 Oct 2020 07:06 PM
மதுரை விமான நிலையம் வழியாக கொல்கத்தா மற்றும் பெங்களூருக்கு புதிதாக இரண்டு விமானங்கள் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து சென்னைக்கு 4 விமானங்களும், டெல்லிக்கு ஒரு விமானமும், பெங்களூருக்கு ஒரு விமானமும், மும்பைக்கு ஒரு விமானமும், ஹைதராபாத்திற்கு 2 விமானங்களும் தற்போது இயக்கப்படுகிறது.
கரோனா ஊரடங்கிற்கு முன், மதுரை விமானநிலையம் வழியாக 24 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானங்கள் படிபடியாக இயங்கத் தொடங்கியுள்ளன. தற்போது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சொந்த விஷயமாகவும், வியாபார ரீதியாகவும் பயணிக்கத் தொடங்கியுள்ளதால் மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
அதனால், மதுரை விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்காக கூடுதலாக 2 புதிய விமானங்கள் இயக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வழியாக மதுரைக்கு வரும் 25-ம் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஒரு விமானம் இயக்குகிறது. இந்த விமானம், கொல்கத்தாவில் அதிகாலை 7.30 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமானநிலையத்திற்கு மதியம் 12 மணிக்கு வருகிறது. பெங்களூரு வரும்போது அங்கு இந்த விமானம் 40 நிமிடங்கள் நிற்கும்.
மீண்டும் மதுரை விமானநிலையத்தில் இருந்து 12.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம், கொல்கத்தாவுக்கு மாலை 4.55 மணிக்கு சென்றடைகிறது.
அதுபோல், பெங்களூருவில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு ஏர்இண்டியா நிறுவனம் மற்றொரு புதிய விமானம் வரும் 12ம் தேதி முதல் இயக்க உள்ளது.
பெங்களூருவில் அதிகாலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம், மதுரை விமானநிலையத்திற்கு காலை 8.20 மணிக்கு வந்தடைகிறது. அதன்பிறகு கோவைக்கு இதே விமானம் காலை 9.10 மணிக்கு சென்றடைகிறது.
மீண்டும் கோவையில் இருந்து இதே விமானம், காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு நேரடியாக காலை 10.35 மணிக்கு சென்றடைகிறது. கடந்த மாதம் வரை மதுரை விமானநிலையத்திற்கு 9 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
அதன்பிறகு தற்போது 13 விமானங்கள் இயக்கப்பட்டநிலையில் மீண்டும் கூடுதல் 2 புதிய விமானங்களையும் சேர்த்தால் இந்த மாதம் 15 விமானங்கள் உள்நாட்டு போக்குவரத்திற்கு மதுரையில் இருந்து இயக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT