Published : 07 Oct 2020 06:18 PM
Last Updated : 07 Oct 2020 06:18 PM
ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ராமன், லட்சுமணன் போல உள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் மாறி மாறிக் கருத்து தெரிவித்தது, முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை இன்று (அக்.7) அறிவித்தார்.
இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதன் மூலம் சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அம்மாவின் பிள்ளைகள். இருவரும் ராமர்- லட்சுமணர் என்பதை இந்த அறிவிப்பு நிரூபித்துள்ளது. உறுதிப்படுத்தியும் உள்ளது.
ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் எட்டரை கோடித் தமிழ் மக்களும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கிறார்கள். பாரதப் பிரதமரால் பாராட்டுப் பெற்றவர் நமது முதல்வர். 2021-ம் ஆண்டிலும் அதிமுக அரசை அமைக்க, அனைத்துத் தொண்டர்களும் ஏக மனதாக எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதை ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த ஓ.பன்னீர் செல்வம் வழிமொழிந்த சரித்திர சாதனையும் நிகழ்ந்திருக்கிறது.
இந்த அறிவிப்பு ஒற்றுமையின் அடையாளம். இங்கு அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். அதிமுக 2021-ல் வெற்றியை நோக்கிய களப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவுக்கு வாழ்த்துகள். இக்குழு கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆலோசனை வழங்கும். சாமானியர்கள் கூட அதிமுகவில் சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT