Published : 07 Oct 2020 06:01 PM
Last Updated : 07 Oct 2020 06:01 PM

மத்திய அரசுப் பணிகளில் மாநில ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

மத்திய அரசுப் பணிகளில் மாநில ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 07) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகள் வட இந்தியர்களால் எவ்வாறு சூறையாடப்படுகின்றன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறது. உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் சரியானவை; மிகவும் நியாயமானவை.

நீலகிரியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, 'ஒரு மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவோருக்கு அந்த மாநிலத்தின் மொழியில் போதிய அறிவு இருக்க வேண்டும். இந்த நடைமுறை மீறப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பினால், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறார்கள். வட மாநிலத்தில் தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மொழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது எப்படி? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறைப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள்; வட இந்தியர்களுக்கு விதிகளை மீறி முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதைத்தான் பாமக மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. அதே கருத்தைத்தான் சென்னை உயர் நீதிமன்றமும் கூறியிருக்கிறது. இது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பாமகவின் கருத்துகள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடும் இதுதான். தமிழக மக்களின் மனங்களில் இதுகுறித்த கேள்விகள்தான் எழுந்து கொண்டிருக்கின்றன.

தெற்கு ரயில்வே துறை பணியாளர் தேர்வாக இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறை பணியாளர் நியமனமாக இருந்தாலும் வட இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுகின்றனர். இது நிச்சயம் இயல்பாக நடைபெற்றதாக இருக்க முடியாது. அண்மையில் கூட அஞ்சல்துறை போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியே தெரியாத ஹரியாணா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழித் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு அதிசயம் நிகழ வாய்ப்பே இல்லை; மோசடி நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

அதைத் தான் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி, மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறைப் பணிகளில் வட இந்தியர்களை அதிக எண்ணிக்கையில் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திட்டமிட்டு முறைகேடுகள் நடக்கின்றன. உயர் நீதிமன்றத்தின் அறிவுரையால் இம்முறைகேடுகளைத் தடுக்க முடியாது; இவை தொடரவே செய்யும்.

எந்தவொரு சீர்திருத்தமும் சட்டபூர்வமாக செய்யப்பட்டால்தான் அது மதிக்கப்படும்; பின்பற்றப்படும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்கள் நியமிக்கப்படுவதால், மொழிப் பிரச்சினை காரணமாக, அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு சரியாக சேவை வழங்க முடியவில்லை. தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிப்பது மட்டும்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்று பாமக தெரிவித்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது. மொத்தத்தில் மத்திய அரசுப் பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் தவிர்த்த பிற பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிப்பதன் மூலம் வட இந்தியர்கள் திட்டமிட்டுத் திணிக்கப்படுவதும், தேர்வுகளில் முறைகேடுகள் நடத்தப்படுவதும் தடுக்கப்படும். மேலும், மத்திய அரசு அலுவலகங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எளிதாக அணுகி சேவை பெற முடியும்.

எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் அல்லாத பணிகளில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x