Published : 18 Sep 2015 09:58 AM
Last Updated : 18 Sep 2015 09:58 AM

6 ஆண்டுகளை கடந்து ஓடும் 300 அரசு விரைவு பஸ்கள்: பராமரிப்பு பணிகள் மெத்தனத்தால் அவதிப்படும் பயணிகள்

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 6 வருடங்களையும் தாண்டி 300 பஸ்கள் இயக்கப்படுவதால், நெடுஞ் சாலைகளில் திடீரென நின்றுவிடுகின்றன. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,399 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் புதிய பஸ்களும் வாங்கப்படுகின்றன. இருப்பினும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 6 வருடங்களை கடந்த நிலையில் 300 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், நெடுஞ்சாலைகளில் அவை திடீரென நின்றுவிடுகின்றன.

முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால், மாநகரங்களின் உட்பகுதிகளிலும் மற்றும் மாவட்டங்களின் உள்பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் ஜன்னல்கள் உடைந்த நிலையிலும், கதவுகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும் இருக்கின்றன. மழை நீர் உள்ளே இறங்கி மேற்கூரை மோசமாக சேதமடைந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் 2 பஸ்களுக்கு ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப அலுவலர் உட்பட மொத்தம் 15 (ஒரு பஸ்ஸுக்கு 7.5 பேர்) ஊழியர்கள் பணிபுரிந்தனர். 2003-ல் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 பஸ்களுக்கு 13 ஆக குறைக்கப்பட்டது. தற்போதுள்ள நிலவரப்படி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 100 பஸ்களுக்கு 28 ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

500 பஸ்களை மாற்ற வேண்டும்

இது தொடர்பாக சிஐடியுவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘நீண்டதூரம் செல்லும் விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களை 2 ஆண்டுகள் அல்லது 8 லட்சம் கி.மீ. தூரம்தான் இயக்க வேண்டும். ஆனால், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிலும், 300 பஸ்கள் 6 ஆண்டுகளை கடந்தும் ஓடுகின்றன. பழமையான பஸ்களை ஓட்டுவதாலும், போதிய அளவில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும் நெடுஞ்சாலைகளில் அவை அடிக்கடி நின்றுவிடுகின்றன. எனவே, இந்த பஸ்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதுதவிர, மற்ற போக்குவரத்துக் கழகங்களில் 8 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களை பராமரிக்கும் பிரிவில் சுமார் 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே, இந்த காலிப்பணி யிடங்களை நிரப்பி, தரமான உதிரி பாகங்களை வழங்கி பராமரிப்புப் பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக தொமுச பொருளாளர் நடராஜன் கூறும்போது, “குரோம்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், கோவை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் அரசு பஸ்களுக்கு பாடிகட்டும் பணிகள் நடந்தன. இங்கு தரமாக பாடி கட்டினர். பின்னர், அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும் செய்தனர். எனவே ஆசியாவிலேயே சிறந்த பாடி கட்டும் நிறுவனங்களாக குரோம்பேட்டை மற்றும் நாகர்கோவில் மையங்கள் தேர்வாகி விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களிடம் பஸ்களுக்கு பாடி கட்டப்படுகின்றன. இவைகள் தரமில்லாமல் இருக்கின்றன. புதிய பஸ்கள் 2 வருடங்களில் முற்றி லும் சேதமடைந்து விடுகின்றன. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவ னங்கள் சார்பில் எந்தவித பராமரிப்புப் பணிகளும் மேற் கொள்ளப்படுவதில்லை’’ என்றார்.

அரசு பஸ்களின் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கருத்து கேட்க பலமுறை முயற்சித்த போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x