Published : 07 Oct 2020 02:25 PM
Last Updated : 07 Oct 2020 02:25 PM
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று அந்தக் கட்சியினர் கருத்துத் தெரிவித்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அண்மைக்காலமாக அந்தக் கட்சி மட்டுமின்றி பல்வேறு தரப்பிலும் விவாதம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக இப்போதைய முதல்வர் கே.பழனிசாமி இன்று (அக். 7) அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்து, கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன் மாவட்டச் செயலாளர் ப.குமார் ஏற்பாட்டின் பேரில் துணைச் செயலாளர் ராஜ்மோகன் மற்றும் நிர்வாகிகள் கும்பக்குடி கோவிந்தராஜன், ராவணன், பகுதிச் செயலாளர் பாஸ்கர், பாலு, தண்டபாணி உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்பு வழங்கினர்.
இதேபோல், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் தில்லை நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன் மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி ஏற்பாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ரமேஷ், இளம்பெண்- இளைஞர் பாசறை நிர்வாகி விவேக், மாவட்டத் துணைத் தலைவர் சின்னையன், பொருளாளர் சேவியர் உள்ளிட்டோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் அமைந்துள்ள மாம்பலச் சாலையில் அமைச்சர் எஸ்.வளர்மதி ஏற்பாட்டின் பேரில் பகுதிச் செயலாளர் டைமன்ட் திருப்பதி, வட்டச் செயலாளர் பொன்னர், கலைமணி, மகேஸ்வரன் உள்ளிட்டோரும், அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் அமைச்சர் என்.நடராஜன் ஏற்பாட்டின் பேரில் தென்னூரில் உள்ள அமைச்சர் அலுவலகம் முன் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ஜோதி, மாவட்டப் பொருளாளர் அய்யப்பன், அமைச்சர் மகன் ந.ஜவஹர் உள்ளிட்டோரும் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், "முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் அதிமுகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது- பனிப்போர் நடக்கிறது, யாரை அறிவித்தாலும் கட்சி உடைந்துவிடும் என்றெல்லாம் பல்வேறு தகவல்கள் பரவின.
முதல்வர் வேட்பாளர் களத்தில் இருந்ததாகப் பலராலும் கருத்து கூறப்பட்டு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலமாகவே தற்போது முதல்வர் வேட்பாளராக கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியில் போட்டி, கருத்து வேறுபாடு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதிமுகவில் ஒற்றுமை உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT