Published : 07 Oct 2020 02:16 PM
Last Updated : 07 Oct 2020 02:16 PM
"மத்திய, மாநில அரசுகளின் விவசாயத் திட்டங்களின் பலன்கள் உண்மையான விவசயிகளை சென்றடைவதில்லை. திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகாரிகள், இடைத்தரகர்கள், அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர்" என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கலைச் சேர்ந்த சிவபெருமாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
வேடசந்தூர் தாலுகாவில் உதவி விவசாய அலுவலர் தெய்வேந்திரன் பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களையும் சேர்த்து முறைகேடு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை விளைவிக்கும் விவசாயத்தை யாரும் ஊக்குவிக்கப்படுவதில்லை. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விவசாய திட்டங்களை அமல்படுத்தப்படுகின்றன.
ஆனால் இந்த திட்டங்கள் உண்மையான விவசாயிகளுக்கு சென்றடைவது இல்லை. அதிகாரிகள், அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது.
உரிய நேரத்தில் விளை பொருட்களை வாங்குவதில்லை. இதனால் இயற்கை சீரழிவால் விளை பொருட்கள் நாசமாகிறது. விளை பொருட்களை கொள்முதல் செய்வதற்கு கூட அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர். தனக்கு வேண்டிய விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர் என்றனர்.
பின்னர் தமிழகத்தில் கடந்த பத்தாண்டில் மத்திய, மாநில அரசுகள் எத்தனை விவசாய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது? அந்தத் திட்டங்களுக்கு பத்தாண்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?
இந்த திட்டங்களில் நடைபெற்றுள்ள மோசடி? எத்தனை வேளாண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT