Published : 07 Oct 2020 01:50 PM
Last Updated : 07 Oct 2020 01:50 PM
நொய்யல் ஆற்றைப் புனரமைத்தல் எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் பணிகளால் நொய்யல் ஆற்றின் உயிர்ச் சூழல் சிதைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் கோவை சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது:
''நொய்யல் ஆற்றை விரிவாக்குதல், புதுப்பித்தல், புனரமைத்தல் என்ற பெயரில் பொதுப்பணித் துறை சில பணிகளைச் செய்து வருகிறது. குளங்களில் இதுபோன்ற பணிகளைக் கோவை மாநகராட்சி நிர்வாகமும் செய்துவருகிறது. பொதுப்பணித் துறை செய்யவிருக்கும் பணிகள் குறித்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
எனினும் பெரிய அளவிலான ஆய்வும் போதிய திட்டமிடலும் இல்லாமல், தேர்தலையும் தேர்தல்களுக்கான செலவுகளையும் மட்டும் கருத்தில்கொண்டு ரூ.230 கோடியில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பணிகள், நொய்யல் ஆற்றின் உயிர்ச் சூழலைச் சிதைக்கும் வகையில் உள்ளன.
ஆற்றின் நீர் ஆதாரங்களைப் புதுப்பிக்க பல முக்கிய விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், நொய்யல் ஆற்றைப் புதுப்பிப்பது எனும் பெயரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் பணிகளில் ஆற்றின் நீரோடைகளை மீட்பது, தடுப்பணைகளை அமைத்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் என்பன போன்ற எந்த ஒரு முறையான பணியும் பின்பற்றப்படவில்லை. உலகத்தில் எந்தவொரு ஆறும் இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் புனரமைக்கப்பட்டதில்லை.
ஏரி, குளங்களை ஆழப்படுத்தாமல், ஏரிகளின் கரைகளை மட்டும் பலப்படுத்துகிறோம் எனும் பெயரில், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இல்லாது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்.
நீர்நிலைகளைக் காக்கிறோம் என்ற பெயரில் பெரிய குளத்தில் நீர் தேங்கும் பரப்பளவின் ஒரு பகுதியில் ஓலைக் குடிசையில் வசித்துவந்த மக்களைத் துரத்திவிட்டு, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். அங்கு கான்க்ரீட் கலவைகளை உருவாக்கும் இயந்திரங்களையும், கட்டுமானத்திற்குத் தேவையான சேமிப்புக் கிடங்கையும் அமைத்திருக்கிறார்கள். மேலும் நிலத்தில் சிமெண்ட் பாலை ஊற்றி, நிலத்திற்குள் நீர் செல்லாமல் தேங்கும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவைக் குறைக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உக்கடம், பெரியகுளத்தில் நீர் தேங்கும் பரப்பளவைக் குறைக்கும் விதமாகக் கான்க்ரீட் கலவைகளைக் கொண்டு சுவர் எழுப்பி, தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. அங்குள்ள பழமையான மரங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. பேரூர் சொட்டையாண்டி குளத்திற்கும் பெரியகுளத்திற்கும் இடையே உள்ள தாய் வாய்க்காலைக் குளறுபடி செய்து அதனுடைய அமைப்பையே சிதைத்து வருகின்றனர். நொய்யல் நீர் வழித்தடங்களில் உள்ள குளங்களைத் தூர் வாராமல் நீர்நிலைகளை எவ்வாறு காக்க முடியும்?
இத்திட்டத்தின் முழு விவரம் குறித்து விவசாயிகள், எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், ஊடகத்தினர் என யாருக்கும் தெரிவிக்கவில்லை. முழுத் திட்ட அறிக்கையைப் பொதுவெளியில் எங்கும் வெளியிடவில்லை. நீர்நிலைகளைப் பல ஆண்டுகளாகப் பாதுகாக்கும் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பயனாளர்களை வைத்துக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலேயே அதிகாரத்தைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.
ஒரு பக்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில், அழுக்குத் தண்ணீர் தேங்கும் இடத்தில், வழுக்குத் தரையும், ஒளி விளக்கும் அமைத்து உயிர்கொடுக்க முயல்கின்றனர்.
இவற்றை இனியும் சரி செய்யவில்லை என்றால், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் நீதித் துறையை அணுகி சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். பொதுமக்களைத் திரட்டி அறவழிப் போராட்டத்தை நடத்துவோம்''.
இவ்வாறு நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...