Published : 07 Oct 2020 10:23 AM
Last Updated : 07 Oct 2020 10:23 AM

தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.7-ஆக சரிவு: விலை வீழ்ச்சி காலங்களில் நிரந்தர விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மண்டிக்கு நேற்று ஏல விற்பனைக்கு வந்த தக்காளிப்பழங்கள்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.7-ஆக சரிந்துள்ளது. விலை வீழ்ச்சி ஏற்படும் நேரத்தில் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த விலையில் தக்காளி விற்பனை ஆகி வந்துள்ளது. இருப்பினும், சராசரியாக கிலோ ரூ.15 என்ற நிலைக்கு குறையாத அளவில் விவசாயிகளுக்கு விலை கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தக்காளி விலையில் வேகமான சரிவு ஏற்பட்டது. கடந்த வாரத்தில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை தக்காளியின் தரத்துக்கு ஏற்ப விலை கிடைத்து வந்தது. ஆனால், நடப்பு வாரத்தில் தக்காளியின் விலை கிலோ ரூ.7 என்ற நிலைக்கு கீழே சரிந்து விட்டது. இதனால், தக்காளி பயிரிட்டுள்ள தருமபுரி மாவட்ட விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தருமபுரியைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறியது:

ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை வீழ்ச்சி காலம் கட்டாயம் வந்து செல்கிறது. இந்த தருணத்தில் தக்காளியை பயிரிட்ட விவசாயிகள் பழங்களை செடிகளில் இருந்து அறுக்க செலவிடும் கூலிச் செலவினங்கள், பழங்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றிச் செல்லும் செலவினங்கள் ஆகியவற்றை சமன் செய்யும் வகையில் கூட தக்காளியை விற்க முடிவதில்லை. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி கணிசமான பரப்பளவில் விளைகிறது.

இம்மாவட்டங்களில் விளையும் தக்காளிப் பழங்கள் சென்னை, மதுரை, திண்டுக்கல், கும்பகோணம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும், பெங்களூருவுக்கும் விற்பனைக்கு செல்கிறது. விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், தெரிந்த ஒரே தொழில் விவசாயம் தான் என்பதால் விவசாயிகள் நஷ்டங்களையும் சகித்துக் கொண்டு மீண்டும் சாகுபடிக்கு செல்கின்றனர்.

தக்காளிக்கு மட்டு மன்றி இதர சில காய்கறி பயிர்களிலும் இதேபோன்ற விலைவீழ்ச்சி சிரமங்களை விவசாயிகள் அவ்வப்போது எதிர்கொள் கின்றனர். எனவே, விவசாயிகளின் இந்த சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் விலை வீழ்ச்சி காலங்களிலும் நிரந்தர விலை என்ற சூழலை அரசு உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x