Published : 07 Oct 2020 07:43 AM
Last Updated : 07 Oct 2020 07:43 AM
தமிழகத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம்வழங்கப்பட்ட பயிர்க் கடனை மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ‘மிரர்அக்கவுன்ட்’ தொடங்கி அதன் வழியே பெற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் அதைஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயிர்க் கடனை பெற்று வந்தனர்.
“கடந்த 2019-20 நிதியாண்டில் பயிர்க் கடன் குறியீடாக ரூ.10,000 கோடி நிர்ணயிக்கப்பட்டு, 15.01.2020 வரை 9,89,055 நபர்களுக்கு ரூ.7,070.14 கோடி அளவுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது” என கடந்த பிப்ரவரி மாதம் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். நடப்பு நிதியாண்டிலும் தொடர்ந்து பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களில் அவ்வப்போது விவசாயிகள் கடனை புதுப்பிப்பது உண்டு. நிலத்தின் சிட்டா, அடங்கல், தடையில்லா சான்று ஆகியவற்றை வழங்கி கூட்டுறவு சங்கங்களில் கடனை முழுமையாக செலுத்தாமல் பகுதி அளவில் செலுத்தி புதுப்பித்தும், கூடுதல் கடன் பெற்றும் வந்தனர். இதனால் கூட்டுறவு சங்கங்களில் தவணை கடந்த கடன்தொகை குறைவாக இருந்து வந்தது. உதாரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தவணை கடந்த கடனாக ரூ.78.05 கோடி மட்டுமேஇருந்தது. தற்போது 238 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 41,807 விவசாயிகளுக்கு ரூ.299.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசின் உத்தரவின் பேரில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வாங்கிய முழு கடனையும், தங்கள் பகுதி கூட்டுறவு சங்கங்களில் செலுத்திவிட்டு, மீண்டும்கடன் வேண்டுவோர் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ‘மிரர் அக்கவுன்டில்’ பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
கடந்த 1.8.2020 தேதியன்று இதை தமிழக அரசு அறிவித்து, அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டது. இந்த புதிய நடைமுறையால் வாங்கிய முழுகடனையும்செலுத்த முடியாமலும், கூடுதல் கடன் பெற முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது பயிர் சாகுபடி காலம் என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த புதிய முறையால் தவணை கடந்த கடன் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மீண்டும் கூட்டுறவு சங்கங்களில் பழைய முறையில் கடன் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த குழப்பத்திற்கிடையே சில அரசியல் கட்சிகள் விவசாயிகளிடம், “சட்டமன்ற தேர்தலுக்குப் பின் ஆட்சியை பிடிக்கும் அரசு, பயிர்க் கடனை தள்ளுபடி செய்யும். எனவே பயிர்க் கடனை தற்போது செலுத்த வேண்டாம்” என்று பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
‘மிரர் அக்கவுன்ட்’ என்றால் என்ன?
கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அல்லது நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் இணையான கணக்கு (பேரலல் அக்கவுன்ட்) தொடங்க வேண்டும். அதன் பெயர் ‘மிரர் அக்கவுன்ட்’ இந்த கணக்கின் மூலம் கூட்டுறவு கடன் சங்கம் கொடுக்கும் ரசீதை காட்டி கூட்டுறவு வங்கிகளில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல, சங்கத்துக்கு பணம் செலுத்த வேண்டியதாக இருந்தாலும், வங்கியில் பணம் செலுத்தி அந்த ரசீதை சங்கத்தில் சமர்ப்பித்தால் போதும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT