Published : 06 Oct 2020 05:32 PM
Last Updated : 06 Oct 2020 05:32 PM

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, முத்தரசன் இன்று (அக். 6) வெளியிட்ட அறிக்கை:

"விவசாயத்தைப் பெருவணிக நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவிட்டு, விவசாயிகளை அழித்தொழிக்கும் அபாயகரமான வேளாண் விரோதச் சட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியளிப்பு மற்றும் ஒப்பந்தங்கள் பண்ணை சேவைகள் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களையும் எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வேரோடு பிடுங்கி எறியும் விவசாயிகள் விரோதச் சட்டங்களை 'விவசாயி மகனின்' அதிமுக ஆட்சி வெட்கமின்றி ஆதரித்து வருகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு அரசும் பெருவணிக நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம் இயற்றி, கதவு திறந்து வைத்துள்ளது.

விவசாயிகளின் வாழ்க்கைக்குப் பேராபத்து ஏற்பட்டிருப்பதை உணர்ந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கூட்டி, வேளாண் விரோதச் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x