Published : 06 Oct 2020 05:35 PM
Last Updated : 06 Oct 2020 05:35 PM
பிரதம மந்திரி கிசான் திட்ட முறைகேடு காரணமாக 30-க்கும் மேற்பட்ட வேளாண் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சம்பந்தமில்லாத மற்ற ஊழியர்களை இடமாற்றம் செய்யும் அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த நிதி விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேளாண்துறையின் கீழ் அட்மா (ATMA -Agriculture Technic Managment Agency) எனப்படும் அமைப்பு செயல்படுகிறது.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் எனத் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு மாதம் 25 ஆயிரம் ரூபாய் என்ற தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபர்களும் நிதியைப் பெறும் வகையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து பலர் கைது செய்யப்பட்டு, துறை ரீதியாகப் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது..
இந்தக் குற்றச்சாட்டு காரணமாக, அட்மா பணியாளர்களாக உள்ள வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், மற்றவர்களைப் பணியிடமாற்றம் செய்யும்படி மாவட்ட அளவிலான இணை இயக்குனர்களுக்கு தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் இயக்குனர் செப்டம்பர் 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை.விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களைப் பணியிடமாற்றம் செய்யும்படி பிறப்பித்த வேளாண் இயக்குனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்குத் தொடர்பாக வேளாண் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 29-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT