Published : 06 Oct 2020 04:20 PM
Last Updated : 06 Oct 2020 04:20 PM
ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தடையை மீறி உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முயன்ற 8 பெண்கள் உட்பட 110 பேரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்பதாலும், அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீருடன் கலந்து சுரங்கப்பாதையில் குட்டைப்போல் தேங்குவதாலும் ரெட்டித்தோப்பு பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்கள் பாதை வசதி இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, ரெட்டித்தோப்பு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், சுரங்கப்பாதையை ஒட்டியுள்ள கழிவுநீர் கால்வாயைத் தூர்வாரி கழிவுநீர் சீராகச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நகராட்சி நிர்வாகம் அதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (அக். 6) நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து ஆம்பூர் முழுவதும் விநியோகம் செய்தனர்.
இதையறிந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, பொதுமக்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நேற்று (அக். 5) பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து துண்டுப் பிரசுரம் அச்சடித்துக் கொடுத்த அச்சகத்துக்கு வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் சீல் வைத்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், "நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முயன்றால் அரசு அதிகாரிகள் அதை முறியடிக்கப் பார்க்கின்றனர். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி" எனக்கூறி இன்று காலை நகராட்சி அலுவலகத்தை நோக்கி ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தாமாக முன்வந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் என உளவுத்துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்ததால், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையில், நகர காவல் ஆய்வாளர் திருமால் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ரெட்டித்தோப்பு பகுதியில் இன்று காலை 6 மணிக்குக் குவிக்கப்பட்டனர்.
உள்ளிருப்புப் போராட்டத்துக்குத் திரண்டு வந்த பொதுமக்களை வழியிலேயே மடக்கி காவல் துறையினர் கைது செய்தனர். பெண்களும் போராட்டத்தில் பங்கெடுக்க வந்தபோது அவர்களும் கைது செய்யப்பட்டனர். 8 பெண்கள் உட்பட 110 பேரை ஆம்பூர் நகர காவல் துறையினர் கைது செய்து, அருகேயுள்ள தனியார் இடத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட ரெட்டித்தோப்பு பகுதி மக்களை ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவின் பேரில், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியர் பத்மநாபன், நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 20 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில், "ரெட்டித்தோப்பு பகுதியை ஒட்டியுள்ள எம்ஜிஆர் சிலை அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளால் 12 அடியுள்ள கால்வாய் தற்போது 3 அடியாகச் சுருங்கிவிட்டது. இதனால், கழிவுநீர் சீராகச் செல்ல முடியாமல் சாலையில் ஓடுகிறது. எனவே, கால்வாய்ப் பகுதியை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று ரெட்டித்தோப்பு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். சுரங்கப்பாதையில் மழை நீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து கொடுப்பதாக உறுதியளித்தது. அதன்படி, எம்ஜிஆர் சிலை அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பெதஸ்டா தனியார் மருத்துவமனை அருகே 9 மீட்டர் அளவில் கால்வாய் அமைக்கவும் இன்று இடம் ஆய்வு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT