Published : 06 Oct 2020 03:14 PM
Last Updated : 06 Oct 2020 03:14 PM

எந்த அடிப்படையில் கரோனா பாதித்தவர் வீட்டை தகரம் வைத்து அடைக்கிறீர்கள்?- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

கரோனா சிகிச்சையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி சென்னை மாநகராட்சியினர் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற உத்தரவிடவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கில் அரசும், மாநகராட்சியும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

“என் கணவருக்கு அறிகுறியே இல்லாத கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அப்படி கண்டறியப்பட்டவுடன், எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் எங்களிடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் என்னுடைய கணவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வலுக்கட்டாயமாக கரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்படி அழைத்துச் செல்லப்பட்ட மையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. என் கணவரை அழைத்துச் சென்றபின் எங்கள் வீட்டின் முன் தகரம் வைத்து அடைத்தனர்.

அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கரோனா தொற்று உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் விதிகள் வகுத்துள்ளன. அதையும் மீறி சென்னை மாநகராட்சி இவ்வாறு செயல்படுகிறது.

மத்திய மாநில அரசுகளின் விதியைப் பின்பற்றவும், கரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்த கூடாது என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் பிரியங்கா கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி சத்யநாராயணன் தனக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மாநகராட்சி தரப்பிலிருந்து யாரும் வந்து கண்காணிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் கரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்தப் பகுதியில் தகரம் அடிக்கப்படுவதன் நோக்கம் என்ன, எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதேபோன்றதொரு வேறொரு விவகாரத்தில் கரோனா பாதித்தவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் வலுக்கட்டாயமாக அவர் வீட்டு வாசலைத் தகரம் வைத்து வீட்டை மூடி வெளியே வராமல் செய்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x