Published : 06 Oct 2020 02:38 PM
Last Updated : 06 Oct 2020 02:38 PM

பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம், கைப்பேசி செயலி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மற்றும் மெய்தோற்ற கைப்பேசி செயலியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை

பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மற்றும் மெய்தோற்ற கைப்பேசி செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 6) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பூம்புகார் என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பொதுத்துறை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, 1973 ஆம் ஆண்டு முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக கைவினைஞர்களின் கடுமையான உழைப்பினால் பித்தளை, பஞ்சலோகம், மரம், கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கைவினைப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதோடு, கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்த பயிற்சி அளித்தல், கைவினைஞர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்துதல், வடிவமைப்புகளில் புதுமையை ஊக்குவித்தல், கைவினைஞர்களுக்கு சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் (Poompuhar Virtual Reality Showroom) மூலம் தமிழக கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலிருந்தும் முப்பரிமாண முறையில் பார்க்க முடியும்.

இந்த மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பத்தை விமான நிலையம், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் அமைத்து கைவினைப் பொருட்களை எளிதாகச் சந்தைப்படுத்த இயலும்.

குறிப்பாக, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் கண்காட்சிகளில் மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பம் மூலம் அக்கைவினைப் பொருட்களை அந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லாமலே, அவற்றை முப்பரிமாண வடிவமைப்பில் வாடிக்கையாளர்கள் பார்த்து இணையதள வழியாக வாங்கக்கூடிய வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பம் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்த உறுதுணையாக இருக்கும்.

மேலும், தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வகையில், புதிய முயற்சியாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மெய்தோற்ற கைப்பேசி செயலி (Augmented Reality Mobile App) மூலம், கைவினைப் பொருட்களை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தி, அலுவலகம், வீடு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அலங்கரித்து காட்டி கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து கைப்பேசி வாயிலாகவே விற்பனை ஆணைகளைப் பெறமுடியும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x