Published : 06 Oct 2020 02:34 PM
Last Updated : 06 Oct 2020 02:34 PM
தொல்லியல் துறை சார்பில் 3 கோடியே 51 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட, கட்டபொம்மன் கோட்டை, மனோரா நினைவுச் சின்னம் மற்றும் டச்சுக் கல்லறை ஆகிய மூன்று நினைவுச் சின்னங்களை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று (அக். 5) திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 6) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின்படி, சுற்றுலாத் துறையின் மூலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளத் தெரிவு செய்யப்பட்டு, இப்பணிகளை மேற்கொள்வதற்காக 24 கோடியே 81 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள கட்டபொம்மன் கோட்டையின் எஞ்சிய பகுதியைப் புனரமைத்துப் பாதுகாக்கும் வகையில், 92 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில், கோட்டையின் எஞ்சிய பகுதிகளை சுண்ணாம்பு கலவை கொண்டு சீர் செய்யப்பட்டு, சுற்றிலும் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பாதுகாவலர் அறை, புல்வெளித்தளம், மின்விளக்குகள், வழிகாட்டுப் பலகைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சரபேந்திர ராஜபட்டினம் கிராமத்தில், எட்டு அடுக்குகளைக் கொண்ட 75 அடி உயரமுள்ள அறுகோண அமைப்புடைய மனோரா நினைவுச் சின்னத்தைப் புனரமைத்துப் பாதுகாத்திடும் வகையில், 2 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில், கோட்டையைச் சுற்றிலும் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்து, குடிநீர் வசதி, பாதுகாவலர் அறை, புல்வெளித்தளம், மின்விளக்குகள், வழிகாட்டுப் பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள டச்சுக் கல்லறையைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில், 25 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில், கல்லறையைச் சீரமைத்து சுற்றிலும் கற்கட்டுமானத்துடன் கூடிய இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டு, புல்வெளித்தளம், வழிகாட்டிப் பலகைகள், மின் விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று நினைவுச் சின்னங்களை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சியில் இன்று திறந்து வைத்தார்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment