Published : 06 Oct 2020 02:09 PM
Last Updated : 06 Oct 2020 02:09 PM
கொள்முதல் நிலையங்களில் திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது போல ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதம் வரை நீட்டித்து அரசாணை வெளியிட்டு, தற்போது விவசாயிகள் சாலைகளில் நெல்லைக் கொட்டி காயவைத்துப் பாதுகாக்கும் அவலங்களையும் அதற்கான செலவுகளையும் தவிர்க்க வேண்டும் என திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழக விவசாயத்தில் ஆளுகின்ற அதிமுக அரசு எந்தவிதமான அக்கறையும் காட்டாத நிலையில், விவசாயத்தைத் தவிர வேறு எதையும் அறியாத தமிழக விவசாயிகள், அதிலும் குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள், பருவ மழையை மட்டுமே நம்பி தங்களது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் குறுவைத் தொகுப்பு, சம்பா தொகுப்பு, விவசாய மானியங்கள், விவசாயக் கடன் இப்படி எதையுமே கொடுக்காமல் மேலும் விவசாயத்தை வஞ்சித்து வருகிறது.
கடந்த 2019-20 ஆம் ஆண்டும் இதே போன்றதொரு சூழ்நிலையில் விவசாயத்தை மேற்கொண்ட விவசாய நிலங்களில், ஆனைக்கொம்பன் நோயின் தாக்கம் ஏற்பட்டு விவசாயத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. இதுகுறித்து விவசாயிகளும், விவசாய ஆர்வலர்களும் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வேளாண்துறைக்கும் பல புகார்களைத் தெரிவித்த நிலையில், அதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பயிர்க் காப்பீட்டுப் பலனிலும் சேர்த்துக் கொள்ளவில்லை.
இன்றுவரை கடந்த ஆண்டிற்கான ஆனைக்கொம்பன் பேரழிவுக்கு விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் தமிழக அரசு கொடுக்கவில்லை. இந்தப் பருவமான 2020-21 ஆம் ஆண்டும் விவசாயப் பயிர்களில் ஆனைக்கொம்பனின் தாக்கம் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆனைக்கொம்பன் நோயின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், வேளாண்துறை, இந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
கரோனாவின் பெயரைச் சொல்லி அரசு வேளாண் அதிகாரிகள் கிராமப்புறங்களுக்குச் சென்று நோய் பாதித்த விவசாய நிலங்களைப் பார்வையிடுவதில்லை. அதேபோல விவசாய ஆர்வலர்கள் அரசுக்குக் கொடுக்கும் எச்சரிக்கைகளையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.
எனவே, தமிழக அரசும் வேளாண் துறையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் டெல்டா பகுதிகளில் வேளாண் அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக்குழுவை அமைத்து கிராமங்கள்தோறும் சென்று ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தை இனம் கண்டு, விளைந்து நெற்கட்டும் பருவத்தில் உள்ள பயிர்களைக் காக்க வேண்டும்.
இதுகுறித்து விவசாயிகளின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளைப் பரிந்துரைப்பதோடு, அந்த மருந்துகளை அனைத்து அரசு வேளாண் மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். மேலும், ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் பயிர்களை இயற்கைப் பேரழிவுக்கு ஆளான பயிர்களாகக் கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்கிட வேண்டும்.
மேலும் தற்போது தமிழகத்தில், குறிப்பாக டெல்டா பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுவதால், தமிழகத்தின் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரின் வலியுறுத்தலுக்குப் பிறகு தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கெனவே விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள தரைத் தளங்கள், மற்றும் தார்ப்பாய்களை நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட அரசுத் தரப்பிலிருந்து வழங்க வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது போல ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதம் வரை நீட்டித்து அரசாணை வெளியிட்டு, தற்போது விவசாயிகள் சாலைகளில் நெல்லைக் கொட்டி காயவைத்துப் பாதுகாக்கும் அவலங்களையும் அதற்கான செலவுகளையும் தவிர்க்க வேண்டும்
மேலும் பல்வேறு தேவை இல்லாத செலவுகளை இந்த அரசு விவசாயிகளுக்கு ஏற்கெனவே ஏற்படுத்தி இருப்பதால், விளைந்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொண்டுவரும் நேரத்தில், மூட்டை ஒன்றுக்கு 45 ரூபாய் எந்தக் காரணமும் இல்லாமல் பெற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்த உணவுத்துறை அமைச்சர் நேரடி நெல் கொள்முதல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்”.
இவ்வாறு ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT