Published : 06 Oct 2020 01:28 PM
Last Updated : 06 Oct 2020 01:28 PM
முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை அதிமுகவில் வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்தனர்.
அதிமுக 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த சில மாதங்களில் நோய்வாய்ப்பட்ட ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டு ஓபிஎஸ் அப்பொறுப்புகளைக் கவனித்தார். ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அன்றே ஓபிஎஸ் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது ஓபிஎஸ்ஸுக்கும் சசிகலா தரப்புக்கும் பனிப்போர் ஏற்பட்டது.
பின்னர் ஓபிஎஸ் நீக்கப்பட்டதும், முதல்வராக சசிகலா தேர்வானதும், அவர் சிறை சென்றதும், ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்ததும் அதிமுகவில் பரபரப்பான காட்சிகள். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் அனைத்தும் தலைகீழானது. தன்னைத் தேர்வு செய்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்துடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என இபிஎஸ் அறிவித்து மீண்டும் ஓபிஎஸ்ஸுடன் இணைந்ததும் நடந்தது.
அப்போது ஓபிஎஸ்ஸுக்கு கட்சியின் அவைத்தலைவருக்கு அடுத்து பொதுச் செயலாளருக்கு இணையான ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தும், துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால், அது நடக்கவே இல்லை. ஆட்சியில் ஓபிஎஸ்ஸுக்குப் பெரிய பதவி இல்லாத நிலையில் கட்சியிலும் தன் கோரிக்கை நிறைவேறாததால் தேர்தலை நெருங்கும் நேரத்தில் ஓபிஎஸ் ஆட்சேபம் தெரிவிக்க ஆரம்பித்தார்.
முதல்வர் வேட்பாளர் குறித்து செல்லூர் ராஜுவும், ராஜேந்திர பாலாஜியும் அளித்த பேட்டிகள் செயற்குழுவில் முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளியது. ஓபிஎஸ்ஸின் திடீர் விஸ்வரூபம் அதிமுகவுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் அதிக ஆதரவாளர்கள், அமைச்சர்களைக் கைக்குள் வைத்துள்ளது யார் என்கிற போட்டியும், அதிமுகவுக்குள் மூத்த தலைவர்கள் மோதலும் தேர்தலில் கடும் பாதிப்பை உருவாக்கும் என்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் இணைந்து பேசி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்று சொல்லி, கெடு தேதியும் முடியப்போகிறது. இருவரும் அவரவர் ஆதரவாளர்களைத் தனித்தனியே சந்தித்து வருகின்றனரே தவிர ஒன்றிணைந்து ஆலோசனை செய்யவில்லை. இந்நிலையில் நேற்று துணை முதல்வர் ஓபிஎஸ் போட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறுதிக்கட்டமாக முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அதில் ஓபிஎஸ்ஸைச் சமாதானப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முதல்வருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இன்று சென்னை வந்த ஓபிஎஸ்ஸைச் சந்தித்துப் பேசினர்.
தற்போதைக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை ஒத்திவைத்து தேர்தல் நெருக்கத்தில் முடிவு செய்துகொள்ளலாம். மற்றபடி கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்துக் கொள்ளலாம் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் நாளை ஒரு தற்காலிகத் தீர்வுக்கு இரு தரப்பும் வந்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனாலும், இது தற்காலிகத் தீர்வாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT