Published : 06 Oct 2020 11:57 AM
Last Updated : 06 Oct 2020 11:57 AM
கரோனா நோய்த் தடுப்பு மருத்துவ சிகிச்சைகளில் ஒன்றாக அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் பயன்படுத்த வேண்டும், அம்மருத்துவ முறைக்கு உரிய முறையில் அங்கீகாரம் அளிக்கவும், கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் இதர சிகிச்சை முறைகளோடு அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் சேர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று எழுதியுள்ள கடிதம் வருமாறு:
“கரோனா நோய்த்தொற்று மக்களின் அன்றாட வாழ்வைப் புரட்டிப் போட்டுள்ளது. தொற்றுக்கு ஆளானவர்கள் மட்டுமன்றி பாதிக்கப்படாதவர்களும் அச்சத்துடன் வாழும் அவலநிலைமை ஏற்பட்டுள்ளது.நோய்த் தொற்றைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் அலோபதி மருத்துவத்துடன் பாரம்பரிய சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ மருத்துவ முறைகளும் நல்ல பலனை அளித்துள்ளன. இதேபோன்று அக்குபஞ்சர் முறையும் நல்ல பலனைத் தந்துள்ளதாக அறிய முடிகிறது.
ஆனால், தமிழக அரசு பாரம்பரிய மருத்துவ முறைகளையும், அக்குபஞ்சர் முறைகளையும் பயன்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை எனத் தெரிகிறது. பக்கவிளைவுகள் இல்லாத எளிய மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சை முறையானது கண்டறியப்படாத நோய்களையும், சவாலான உடல் நிலையையும் வேகமாக குணப்படுத்திட உதவும் மருத்துவ முறை என ஐக்கிய நாடுகளின் அறிவியல் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பும் சான்றளித்திருக்கிறது.
இம்மருத்துவம் பாரம்பரியமாக சீனாவிலும், தற்போது உலகில் 129 நாடுகளில் சுமார் 80 சதவிகித மக்கள் பயன்படுத்தும் மருத்துவமாகவும் மாறியுள்ளது என்பதோடு அந்நாடுகளில் கரோனா நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை அளித்திருக்கிறது என்பதையும் செய்திகளின் வாயிலாக காண முடிகிறது.
நமது நாட்டிலும் கூட மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு, பரவலான எண்ணிக்கையில் மக்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் பயனடைகிறார்கள் என்பதையும் காண முடிகிறது. தமிழக அரசின் திட்டக்குழுவின் துணைத்தலைவரும் அக்குபஞ்சர் மருத்துவ முறையை ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளார் என்பதையும் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
இப்பின்னணியில், கரோனா நோய்த் தடுப்பு மருத்துவ சிகிச்சைகளில் ஒன்றாக அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் பயன்படுத்த வேண்டும் எனவும், அம்மருத்துவ முறைக்கு உரிய முறையில் அங்கீகாரம் அளிக்கவும், கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் இதர சிகிச்சை முறைகளோடு அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் சேர்த்து அளிக்கும் வகையிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT